புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து , பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பணிவிலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி 2014ம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. துபாய் ,அபுதாபி , சார்ஜா , ஓமன் ஆகிய 4 பகுதிகளில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டி , கொரோனா சூழலால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் , இந்த டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் பதவிவிலகப்போவதாக ரவிசாஸ்த்ரி பிசிசிஐயில் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரவிசாஸ்த்ரி பதவிவிலக நேர்ந்தால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் கணிக்கின்றனர். சமீபத்தில் இலங்கைக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் டி20தொடர்களில் விளையாடியபோது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.