அபிஷேக் சர்மா சூப்பர் சாதனை
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி-20 தொடரின் 3ஆவது போட்டி தர்மசாலாவில் (இமாச்சல்) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4ஆவது டி-20 போட்டி டிசம்பர் 17ஆம் லக்னோவில் நடைபெறுகிறது. இந்நிலையில், தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வித்தியாசமான பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாயிண்ட்
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற “ஸ்குவாஷ் உலகக்கோப்பையில்” இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா புதிய வரலாறை படைத்தது. ஸ்குவாஷ் உலகக்கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகக்கோப்பையுடன் வேலவன் செந்தில் குமார், ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், அனஹாத் சிங் உள்ளிட்ட இந்திய அணியினர்.
ஜடேஜா மனைவிக்கு முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் மாநில அமைச்சருமான (பாஜக) ரிவாபா ஜடேஜா, கடந்த வாரம் தனது கணவரின் ஒழுக்கத்தைப் புகழ்ந்து பேசுகிறேன் என்ற பெயரில், இந்திய அணியின் மற்ற வீரர்கள் மீது அவர் வைத்த மறைமுகக் குற்றச்சாட்டு சர்ச்சையாகியுள்ளது. குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ரிவாபா ஜடேஜா பேசுகையில்,”எனது கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் விளையாடுவதற்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா எனப் பல வெளிநாடுகளுக்குச் செல்கிறார். 24 மணி நேரமும் அவர் உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறார் ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது. ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடு கிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனது கணவர் கடந்த 12 ஆண்டுகளாக வீட்டிலிருந்து விலகியே இருக்கிறார். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவருக்குத் தனது தார்மீகக் கடமை என்ன என்பது நன்றாகத் தெரியும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஜடேஜா மனைவியின் இந்த அடாவடி பேச்சுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், விளையாட்டுச் சார்ந்த செய்தியாளர்கள்,”கிரிக்கெட் பிரிவில் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் என்பது ஒரு மருத்துவனையின் அறுவை சிகிச்சை அறைக்கு இணையானது ஆகும். யாரும் நுழையக்கூடாது ; அங்கு நடப்பது பற்றி வெளியே பேசவும் கூடாது. அதே போல தான் வீரர்களின் சுற்றுப்பயண நிகழ்வு களும். ஜடேஜா மனைவி தனது கணவரின் பெருமையை பேசட்டும். ஆனால் அவர் ஒரு மாநில அமைச்சராக இருந்தா லும் ஒரு விளையாட்டு வீரரின் தனிப்பட்ட நிகழ்வுகளை அவர் பேசக் கூடாது. அவருக்கு உரிமை இல்லை” என எச்சரிக்கையுடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
