games

img

குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் - இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஷமி புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் ஞாயிறன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, போட்டிங்கைத் தேர்வு செய்தார், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த ஆட்டத்தின் மூலம் 200வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் ஷமி, இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் ஷமி பெற்றார். மொத்தம் 9896 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய பவுலர்களான அஷ்வின் (10248 பந்துகள்), கபில்தேவ் (11066 பந்துகள்) மற்றும் ஜடேஜா (11989 பந்துகள்) ஆகியோரை முகமுது ஷமி முந்தியுள்ளார்.  

இந்திய அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் (103 இன்னிங்ஸ்) விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார் ஷமி. கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 

இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 மற்றும் அதற்கும் மேலான விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள் வரிசையிலும் ஷமி இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்