games

img

உயரம்தான் மூன்றரை அடி... தன்னம்பிக்கையால் பதக்கங்களை குவிக்கும் சிறுவன்....

தஞ்சாவூர்:
பேராவூரணி அருகே மூன்றரை அடி உயரமுள்ள சிறுவன் ஒருவன், தற்காப்புக் கலையில் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துள்ள நிலையில், தேசிய அளவிலானபோட்டியில் கலந்து கொள்ள நிதியுதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(39), கரூரில் தேங்காய் உறிக்கும் கூலித்தொழிலாளியாக உள்ளார். மாரியம்மாள் விவசாயக் கூலித் தொழிலாளி. இவர்களின் இரண்டாவது மகன் நிகேசன் (14) அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்6 ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் நடந்த தற்காப்பு கலை பயிற்சியில் சேர்ந்தார். பள்ளிக்கு சென்று, திருச்சிற்றம்பலத்தில் வனப்புலிகள் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி பள்ளி நடத்தி வரும் சேக்அப்துல்லா என்பவர், நிகேசன் திறமையை பார்த்து, தற்காப்பு பயிற்சியில்தொடர்ந்து அவருக்கு பயிற்சி அளித்தார்.திறமையாக பயிற்சி பெற்ற நிகேசன், மாவட்ட அளவில் 4 போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள் என கலந்து கொண்டார். இதில் ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம், சென்னை மற்றும் நாமக்கலில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை மற்றும் கராத்தே போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கமும், திருச்சியில் நடந்த மாநில அளவிலான குடோ போட்டியில் ஒரு தங்கம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி குவித்தார். 

இந்நிலையில், அடுத்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும், தற்காப்பு கலை சங்கத்தினர் நடத்தும் போட்டியிலும் கலந்து கொள்ளஉள்ளார். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள போதிய நிதி இல்லாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து பயிற்சியாளர் சேக்அப்துல்லா கூறுகையில், எனது பயிற்சிபள்ளியில்,சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம், கராத்தே, குடோ, உறைவாள் சண்டை பயிற்சி போன்ற தற்காப்பு கலைகள் கற்று தரப்படுகிறது. இதில் நிகேசன் தனி திறமையான சிறுவன். அவர் 3.9 அடி உயரமும், 24 கிலோ எடையும் கொண்டவர் என்றாலும், அவருக்கான பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். அவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலித் தொழிலாளிகள். இருப்பினும் அவர்கள் பெற்றோர்கள், பிள்ளையின் வெற்றியை கண்டு, அவரை ஊக்கப்படுத்துகின்றனர். உயரம் தடையில்லை என நிகேசனும் தன்னம்பிக்கையாக விளையாடிவருகிறார். தில்லியில் நடந்த போட்டிகளில் நண்பர்களின் உதவியுடன் அவரை போட்டிக்கு அனுப்பிவைத்தோம். தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடக்கும் போட்டிக்கு சிறிய தொகையை திரட்டியுள்ளோம். இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் அவர் போட்டியில் கலந்து கொள்ள முடியும்” என்றார்.

ஆர்வமுள்ள கொடையாளர்கள் அவருக்கு உதவ - 9786899412

என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.