15-ஆவது சீசன் இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்கள்) தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 6-ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், வியாழனன்று நடைபெறும் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி-பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : வில்லோமூர் மைதானம், சகாரா பார்க், தென் ஆப்பிரிக்கா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுத தென் ஆப்பிரிக்க வீரர்கள், ரசிகர்கள்
வெற்றிக் கொண்டாட்டத்தை குறைத்த இந்திய வீரர்கள்
முதலாவது அரையிறுதியில் இந்தியாவுடன் போராடி நூலிழையில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் கதறி அழுதனர். இதனால் வெற்றிக் கொண்டாட்டத்தை குறைத்துக் கொண்ட இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்க வீரர்களை கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகளுடன் தேற்றினர். இதனை கண்ட தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கை தட்டி இந்திய வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என அன்பை பரிமாறி நாடுகளை கடந்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2014இல் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.