முதல் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை நழுவவிட்ட ஆஸ்திரேலிய அணி, 2-வது மற்றும் 3-வது உலகக்கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறியது. ஆனால் 4-வது உலகக்கோப்பை தொடரில் எந்த வகையில் பயிற்சி பெற்றதோ தெரியவில்லை, ஆஸ்திரேலியா ருத்ரதாண்டவம் ஆடியது. 4-வது உலகக்கோப்பை தொடர் இந்தியா - பாகிஸ்தான் மண்ணில் கூட்டாக 1987 அக்., - நவ., மாதங்களில் நடைபெற்றது. 3 உலகக் கோப்பையும் 60 ஓவர்களாக நடத்தப்பட்ட நிலையில், 4-வது உலகக்கோப்பை 50 ஓவர்களை கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே என 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி குரூப் சுற்றோடு வெளியேறியது. நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதி வரை முன்னேறி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. மறுபக்கம் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மிரட்டலாக விளையாடி வந்தது. லீக் சுற்றில் மட்டும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. மற்ற ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆஸ்திரேலியா அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இறுதியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் மூலம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணியின் சகாப்தம் தொடங்கியது.