குதிரையேற்றப் போட்டி :
41 ஆண்டு வரலாற்றில் சாதனை
இந்தியாவுக்கு 3-வது தங்கம்'
'ஆசிய விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றம் டிரஸ்ஏஜ் பிரிவில் சுதிப்தி ஹஜிலா, திவ்ய கீர்த்தி சிங், ஹர்டே ஷிடா, அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே கச்சிதமாக புள்ளிகளை குவித்த இந்திய அணி 209.205 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் குதிரையேற்றம் என்பது இந்திய விளையாட்டு உலகில் ஆதிக்கமில்லாத சாதாரண விளையாட்டு தான். ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது மாபெரும் சாதனைதான். முக்கியமாக 41 ஆண்டுகால குதிரையேற்ற போட்டி வரலாற்றில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 47 24 11 82
2.தென்கொரியா 13 13 18 44
3.ஜப்பான் 6 18 14 38
6.இந்தியா 3 4 7 14
17 வயது வீராங்கனைக்கு வெள்ளி
பாய்மரப் படகு பிரிவில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 3 பதக்கம்
1. பாய்மரப் படகு போட்டியில் மகளிருக்கான டிங்கி (ILCA4) பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன நேஹா தாக்கூர் கலந்து கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நேஹா தாக்கூர் 27 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் நோப்பாஸார்ன் குன்பூஞ்சன் 16 புள்ளிகளுடன் தங்கமும், சிங்கப்பூரின் கெய்ரா மேரி கார்லைல் 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். 2. பாய்மரப் படகு போட்டியின் ஆடவர் அலைசறுக்கு பிரிவில் (RX:X) இந்தியாவைச் சேர்ந்த ஈபாத் அலி 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். தாய்லாந்தின் நத்தாபோங் போனோப்பரட் 29 புள்ளிகளுடன் வெள்ளியும், தென் கொரியாவின் சோ வோன்வூ 13 புள்ளிகளுடன் தங்கமும் வென்றனர். 3. பாய்மரப் படகு போட்டி ஆடவர் டிங்லி (ILCA7) பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக வரைப்படத்தில் கண்ணுக்கு தெரியாத மக்காவ் தங்கம் வென்று அசத்தல்
சீனாவின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தன்னாட்சிப் பகுதி கொண்ட மக்காவ் தனி நாடாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது. தனக்கு பிடித்தமான வுஷு (WUSHU - கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் கலந்தது) விளையாட்டுப் போட்டியில் கலக்கி வரும் மக்காவ், இதுவரை ஒரு தங்கம், 2 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் டாப் 10-இல் உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மக்காவ் பகுதி உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாது. உலக வரைபடத்தில் 4 அடுக்கு முறையில் ஜூம் (ZOOM) செய்தால் மட்டுமே மக்காவ் பகுதியை காணலாம். உலக வரைப்படத்தில் கண்ணுக்கு தெரியாத ஒரு சிறிய நாடு ஆசிய விளை யாட்டுப் போட்டியில் டாப் 12-இல் கம்பீரமாக நிற்பது மிகப்பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.