games

img

தடைகளை தாண்டிய சாதனைப் பயணம்.....

பாரா பேட்மிண்டன் உலகில் இப்போதும் அவருக்குதான் முதலிடம். வயதும், உடலும் எப்போதும் சாதனைக்கு தடையாக இருக்காது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் பாருல் பர்மார்.

மூன்று வயதில் மற்ற குழந்தைகளைப் போல் ஊஞ்சலில் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் தவறி கீழே விழுந்து விடுகிறார். வலது காலில் பலத்த காயம், எலும்பு முறிவு. ஏற்கனவே போலியோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இது மேலும் உளைச்சலை ஏற்படுத்தினாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிந்தவரை ஈடுபட்ட உடற்பயிற்சியை வழக்கமாக மேற்கொள்ள முடியும் என்ற மன உறுதியை கொடுத்துள்ளது.

முதற் படிக்கட்டு...
குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிறந்து வளர்ந்தவர் பாருல் பர்மார். அவரது தந்தை ஒரு பேட்மிண்டன் விளையாட்டு வீரர். மாநில அளவில் உள்ளூரில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் பெற்றவர். பேட்மிண்டன் கிளப்பில் பயிற்சி பெற்றபோது தந்தையுடன் மகளும் கிளப்புக்கு சென்று வந்தார்.அந்த கிளப்புக்கு வரும் குழந்தைகளுடன் பாருல் பர்மாரும் விளையாட துவங்கினார். குழந்தை பாருல் பர்மாரின் ஆர்வத்தை, திறமையை கவனித்த உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர், மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். அந்தப் பயிற்சியாளர் கொடுத்த உத்வேகம் தேசிய அளவிலான பாரா பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க நீண்டகால அவகாசம் தேவைப்படவில்லை.மாற்றுத்திறனாளி வீரர்கள் கடல் கடந்து பயணம் செல்வது அவ்வளவு சுலபமல்ல. மிகப் பெரிய சவால் நிறைந்தது. அத்தகைய பயணத்திற்கும் பயிற்சியாளர் தந்த உற்சாகமும் பாருல் பர்மாருக்கு உந்துதலாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பெண்கள் பேட்மிண்டன் விளையாட்டில் மன உறுதியுடனும் மன வலிமையுடனும் எதிர் நீச்சல் அடித்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் உலக சாம்பியன் பட்டத்தை 4 முறையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறையும் தங்கப்பதக்கத்தை வென்று சர்வதேச அளவிலும் புகழின் உச்சிக்கு சென்றார்.

அமர்க்களம்...
வெற்றி மேல் வெற்றியை குவித்து தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை அள்ளினார். தொடர்ந்து பதக்கங்களை குவித்த பாருல், உலக அளவில் இந்தியாவின் பெயரை நிலைநிறுத்தினார். அவரது சேவையைப் பாராட்டி, 2009 ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம் அர்ஜூனா விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவரது வெற்றிப் பயணம் இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சீனா, சிங்கப்பூர் என்று கடல்தாண்டியும் சென்றது.
46 வயதை கடந்தும் தடைகளை தாண்டி மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலில் இப்போதும் இவருக்கு தான் “நம்பர் 1 இடம்”. தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
இவருடைய வாழ்வின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றாலும் அவர் ஒரு போதும் சோர்ந்து போகவில்லை. வாழ்க்கைப் பயணத்திலும் விளையாட்டிலும் தொடக்கத்திலேயே பல தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. இவரைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கான பாதையை உருவாக்குவது அப்படி ஒன்றும் எளிதானதாக இல்லை. ஆனாலும் முயற்சியும் பயிற்சியும் அதையும் சாத்தியமாக்கும்.

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு

;