facebook-round

img

எந்தையே, உம் போல் யார் இருக்கிறார் இனி? - சு.வெங்கடேசன் எம்.பி

நீண்ட நேரமாக நாற்காலியில் அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். எண்ணங்கள் அசைவற்று உறைந்து நிற்கிறது. தோழர் என். இராமகிருஷ்ணன் இறந்த செய்தியை எதிர் கொள்ளமுடியவில்லை.

நேற்று முன்தினம் நடந்த வரவேற்புக்குழு கூட்டத்தில் “ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை” என்ற அவர் கடைசியாக எழுதிய நூலைப்பற்றி பேசினேன். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஓராயிரம் கதைகளை எழுதியவர், கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பல்லாயிரம் பக்கங்களை எழுதியவர். இன்னும் பல்லாயிரம் பக்கங்களை எழுதுவதற்கான தரவுகளையும் கனவுகளையும் தன்னகத்தே கொண்டவர்.

எழுதப்பட்ட வரலாறு மட்டுமே நிலைக்கும்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாகம் எண்ணிலடங்காதது. ஆனால் அவற்றைப்பற்றி எழுதப்பட்ட நூற்களோ விரல்விட்டு எண்ணுமளவு மட்டுமே உள்ளது.

எழுதப்பட்ட வரலாறே முந்தைய தலைமுறையின் கனவை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும். கடந்த கால தியாகத்தின் நோக்கத்தை நிறைவேற்ற புதிய தலைமுறையை உந்தித்தள்ளும்.

எழுத்து மகத்தான ஆயுதம். ஒரு போர்களத்துக்கு தேவையான ஆயுதங்களையெல்லாம் ஒற்றை மனிதனே வார்த்துக்கொடுப்பது போல அரை நூற்றாண்டாய் இடைவிடாது வார்த்து தந்த மாமனிதர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்று நூற்களில் சரிபாதிக்கும் மேல் தோழர் என் ஆர் ரால் எழுதப்பட்டவையாக இருக்கும். தமிழில் சுமார் ஆறாயிரம் பக்கங்களும், ஆங்கிலத்தில் ஈராயிரம் பக்கங்களும் எழுதியவர்.

எழுத்தின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் குருதி கொந்தளிப்பை புதிய தலைமுறைக்கு கைமாற்றிக்கொண்டே இருந்தவர்.

ஆவணமாக மாறும் வரலாறே வரலாறென நிலைக்கிறது.

கலையாக மாற்றங்கொள்ளும் தியாகமே மானுட மனங்களில் நிரந்தரமாக கோலோச்சுகிறது. அதனை மீண்டும் மீண்டும் உணர்த்திக்கொண்டே இருந்தவர் தோழர் என். ஆர்.

எந்தையே, இனி யார் இருக்கிறார்

உம் போல் இயங்கவும், இயக்கத்தை ஆவணமாக்கவும், ஆவணங்களையெல்லாம் தேடித்தேடிபதிப்பிக்கவும். எளிய நடையில் இடைவிடாது எழுதிதீர்க்கவும் யார் இருக்கிறார் எந்தையே உன் போல் இனி?

#NR #CPIM

;