facebook-round

img

கோலப்போராட்டம் : மார்கழித் திங்கள் தெருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
போராடப் போதுவீர்! போதுமினோ, இந்தியரே!
சீர்கெட்ட திருநாட்டின் சீருரிமை தான்கெடுத்த
கூர்வேல் கொடுந்தொழிலன் குடிகெடுப்பான் அமித்தன்
பாரார்ந்தோர் குடியுரிமை பறிக்க அலைவானை
போரார்ந்த மனத்தோடு புதிதாக எதிர்த்திடவே
தேரார் தெருவில் தெறிக்கோலம் நீபோட
சீரார் விரலசைய எழுந்தேலோ ரெம்பாவாய்.
#தெருப்பாவை-1

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பங்குக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாரெங்கும்
பையக் கிளம்பும் பாசிச அடிப்பொடி,
நய்யப்புடைக்கும்; நாய்குதறும்; போராடும் மனிதர்
கையிட் டெழுதிய; கலர்க்கோலம் வெறுப்பேற்ற;
செய்யா தனசெய்தார்; சிறைப்பிடித்துச் சென்றார்;
கொய்யென எழுந்தோரே கோலமிட்டு வீட்டுமுன்னே
செய்யுஞ் செயல்கண்டு சிலிர்த்தேலோ ரெம்பாவாய்.
#தெருப்பாவை-2

ஓங்கி முதுகறைந்த உலுத்தர்கள் பேர்தூற்றி
நாங்கள் நம் வீட்டுமுன் கோலமிட் டாடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திருட்டாள்வா ரொழிந்து
ஓங்கு பெரும் ஒற்றுமையில் மனிதரெழ
வீங்கு குடியுரிமைத் திருத்த மசோதா,
போங்கு என்றுணர்ந்தே பொசுக்கித் தெருவெறிய
வாங்கிய கோலப்பொடி வாசல் வார்த்தைகளாய்
நீங்காத புகழே நிறைந்தேலோ ரெம்பாவாய்.
#தெருப்பாவை-3

ஆழி யெனத்திரண்டீர்! ஒன்று நீர் செய்யும்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழிப் பெருங்கோபம் போல் மெய்கறுத்து
பாழியஞ் செய்கிற பாழ்சட்டந் தானெதிர்த்து
ஆழிபோல் மின்னி, ஆவேசங் கொண்டதிர்ந்து,
தாழாதே சாவும் எதிர்த்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடீர், என்ஆர்சியெதிர்த்து
வாசல் கோலமிட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
-ஸ்ரீரசா
#தெருப்பாவை-4
மாயஞ்செய் மண்ணிற் கோலமிடும் மைந்தரை,
தூய பெருவுளத்தோடு தடியரசு எதிர்போரை,
காய அரசெதிர்த்துக் கிளர்ந்த அணியோரை,
தாயை தேசத்தை தம்மொருமை காப்போரை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தழுவி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போயொழியும் குடியுரிமைப் பாதகச் சட்டங்கள்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
#தெருப்பாவை

-ஸ்ரீரசா

;