facebook-round

img

தண்டிப்பதற்காகவே கட்டப்படும் சிறைகள் எப்படி இருக்கும்?

பேராசிரியர் சாய்பாபா… டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். கார்ப்பரேட் நலன்களுக்காக பலியிடப்படும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் குரல் கொடுத்தவர். பசுமை வேட்டை என்ற பெயரில் மத்திய இந்தியாவின் பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட இரக்கற்ற போரை கண்டித்ததில் முதன்மையானவர். சல்வா ஜூடும் என்ற அரச கூலிப்படையை அம்பலப்படுத்தி எழுதியவர். போலியோ தாக்குதலால் 90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருபவர்.

மாவோயிஸ்ட் சார்புள்ள ’புரட்சிகர ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாக கூறி UAPA உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 2014-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் சாய்பாபா. ஓராண்டு சிறைக்குப் பிறகு 2015 ஜூலை மாதத்தில் பிணை வழங்கினாலும், அதே ஆண்டு டிசம்பரில் மறுபடியும் கைது செய்தனர். ஐந்து மாதங்கள் கழித்து 2016 ஏப்ரலில் பிணை கிடைத்தது. ஆனால், 2017 மார்ச் மாதத்தில் வழக்கில் தீர்ப்பளித்த கச்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் இருந்து இப்போதுவரை அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்சனை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் சாய்பாபா. இதயக்கோளாறு உள்ளது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் தாங்கவியலாத வலியில் துடிக்கிறார். ‘’பல நேரங்களில் சிறைக்குள் அவர் மயங்கி விழுந்துகிடக்கிறார். ஆனால், அவருக்கு உயிர் காப்பதற்கு உரிய; போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை” என்கிறார் சாய்பாபாவின் மனைவி வசந்தகுமாரி. சாய்பாபாவுக்கு பிணை கேட்ட இவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நமது பொதுக் கட்டடங்களே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இல்லை. தண்டிப்பதற்காகவே கட்டப்படும் சிறைகள் எப்படி இருக்கும்? சிறையின் கழிப்பறையை பயன்படுத்துவதற்காக தன், கை, கால்களை பயன்படுத்தி தவழ்ந்து செல்ல வேண்டியிருப்பதால் சாய்பாபாவின் ஒரு கால் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக குறிப்பிடுகிறது Newslaundry இணையதளம்.

சாய்பாபா கைது செய்யப்பட்டதற்கு முந்தைய ஆண்டுகளில், அதே ’பசுமை வேட்டை’ நடவடிக்கைகளை விமர்சித்தமைக்காக, ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றச்சாட்டில் மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இவருக்கு பிணை கிடைத்தது.

அதே பசுமை வேட்டை நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக, அதே ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருண் ஃபெரைரா கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடைசியில் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்பட்டார்.

மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான். இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017-ம் ஆண்டு எல்கார் பரிசத் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்துப்பட்டுள்ளதாக கூறி, அதன் ஏற்பாட்டாளர்களையும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் UAPA சட்டப்பிரிவில் கைது செய்தது காவல்துறை. இதில் ஒருவர் சாய்பாபாவுக்காக வழக்காடிய வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங். ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகியவர்கள் மற்ற நான்கு பேர். இவர்கள் ஐந்து பேரும் பல்வேறு மக்கள் நல உரிமைகளுக்காக செயல்பட்டு வருவோர்.

இந்த ஐந்து பேரின் கைதை எதிர்த்த; கண்டித்த புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா (ஏற்கெனவே 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்) ஆகிய ஐந்து பேரை 2018 ஆகஸ்ட்டில் கைது செய்தது புனே காவல்துறை. தற்போது வரை இவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேரின் கைதை கண்டித்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருக்கிறார். 

2015-ல், பேராசிரியர் சாய்பாபாவின் கைதை கண்டித்து அருந்ததி ராய் அவுட்லுக்கில் எழுதிய ஒரு கட்டுரைக்காக criminal contempt நோட்டீஸ் அனுப்பியது மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, துப்புரவு பணியாளர்கள் சூழ்ந்த குடியிருப்பில் வளர்ந்த பேராசிரியர் சாய்பாபாவின் முனைவர் பட்டத்துக்கான தலைப்பு: Elite bias in English writing in India

https://www.livelaw.in/…/prof-gn-sai-baba-bail-rejected-bom…

https://www.newslaundry.com/…/two-possible-ends-prof-gn-sai…

Barathi Thambi

 

;