facebook-round

img

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங்?

பகத் சிங் தூக்கு மேடை ஏறும்போதும் கையில் பகவத் கீதையை வைத்திருந்ததாக இந்த வாரம் வெளிவந்திருக்கும் விஜயபாரதம் இதழ் கூறுகிறது. இது பகத் சிங்கை மிகவும் இழிவுபடுத்தும் செயல். பகத் சிங் கடவுள் நம்பிக்கையற்றவர். 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என புத்தகம் எழுதியவர்.

1931 மார்ச் 23ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங். அவரைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்தவர், லாகூர் சிறையின் வார்டனான சரத் சிங். அவரிடம்தான் தான் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கேட்பார் பகத் சிங். அவர் கேட்ட பெரும்பாலான புத்தகங்கள், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட மார்க்சிய, லெனினிய நூல்கள். கார்ல் லெய்ப்னெச்டின் மிலிட்டரிஸம், லெனினின் லெஃப்ட் விங் கம்யுனிஸம், ரஸ்ஸலின் வை மென் ஃபைட் மற்றும் உப்டன் சின்க்ளேரின் நாவலான தி ஸ்பை உள்ளிட்ட மார்க்சிய நூல்களைத்தான் பகத் சிங் சிறைக்கு வரவழைத்துப் படித்தார்.

அவரைத் தூக்குமேடைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக, வாகே குருவை வணங்கும்படி சரத் சிங் சொன்னபோது, “எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், பல முறை ஏழைகளின் துயரங்களுக்கு காரணமாக இருக்கிறார் என்று கடவுளை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால் தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக்கேட்கிறான் இந்த கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.

பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக, அவரது கடைசி விருப்பத்தை கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை சந்தித்தார். பிராண்நாத் மேத்தாவைப் பார்த்த பகத் சிங், புன்னகைத்தபடியே தான் கேட்ட 'தி ரெவெல்யுஷ்னரி லெனின்' என்கிற புத்தகத்தை கொண்டு வந்தாரா என்று கேட்டார்.

அந்த புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே வழக்கறிஞருக்கு புத்தகம் கேட்டு தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்து போய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், நாட்டிற்கு எதாவது செய்து உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”

மேத்தா சென்ற பிறகு பகத் சிங்கிடம் வந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பாக அவர்கள் தூக்கிலிடப்படபோவதாக தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.

அப்போது பகத் சிங் The Revolutionary Lenin புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
அந்த அதிகாரியிடம் சிரித்தபடி பகத் சிங் கேட்டது இதுதான்: “ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?”

பகத் சிங் தூக்கிலிடப்படும்போது அவரது கையில் எந்தப் புத்தகமும் இல்லை. கைகள் கட்டப்பட்டிருந்தன. தன்னை விடுவிக்க உண்மையிலேயே முயற்சிகளை மேற்கொண்ட ஜவஹர்லால் நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் நன்றி தெரிவிக்கும்படி சொன்னார் பகத் சிங்.

இதுதான் நடந்தது. இதைவிடுத்து, கையில் கீதை வைத்திருந்தார் என்று கூறி பகத் சிங்கை இழிவு செய்வது anti- nationalகளின் வேலை.

-Muralidharan Kasi Viswanathan

;