facebook-round

img

ரஃபேலை விடப் பெரிய ஊழல் பயிர் காப்பீட்டுத் திட்ட ஊழல்!

"பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி". என மோடி அரசின் 'பயிர் காப்பீட்டுத் திட்டம்' குறித்து எழுதுகிறது ஒரு இதழ்.

இரண்டே இரண்டாண்டுகளில் ஒரு பத்து நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட பிரீமியம் தொகைக்கும் அவை அளித்த இழப்பீட்டுத் தொகைக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்ச நஞ்சமல்ல. கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய்கள்.

இதெப்படி என்கிறீர்களா? விவசாயிகளின் பிரச்சினைகளை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து மக்கள் முன் வைப்பதை ஒரு வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் சாய்நாத் இரண்டு நாட்கள் முன் சொன்னதைக் கவனியுங்கள்.

ரஃபேல் ஊழலைக் காட்டிலும் பெரிய ஊழல் மோடி அரசு உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டமாகிய "பிரதான் மந்திரி பீமா ஃபசல் யோஜனா" ஊழல்தான் எனச் சொல்லும் சாய்நாத் அதை இப்படி விளக்குகிறார்:

"மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாவட்டத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா சாகுபடி செய்தார்கள். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் செலுத்திய 'பிரீமியம்' தொகை 19.2 கோடி ரூ. இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு தன் பங்காகக் கொடுத்த தொகை 77 கோடி ரூ. அதே போல மத்திய அரசு கொடுத்த தொகை இன்னொரு 77 கோடி ரூ. சாகுபடி பொய்த்தது. அப்போது விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அளித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 30 கோடி. ஆக 173 கோடி ரூ மக்கள் பணம் ரிலையன்சுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இழப்பீடாக விவசாயிகளுக்குக் கொடுத்த தொகையோ வெறும் 30 கோடி ரூ. இது ஒரு மாவட்டத்தில் மட்டும் நடந்த ஊழல். இதில் ரிலையன்சின் முதலீடு ஒரு பைசா கூட இல்லை. ஒரு பைசா முதலீடு இல்லாமலேயே 143 கோடி ரூபாயை இடு மாவட்டத்தில் மட்டும் சுருட்டிக் கொண்டுள்ளது ரிலையன்ஸ். "

இப்படித்தான் இந்தப் பத்து கார்பொரேட் நிறுவனங்களும் இரன்டாண்டுகளில் 16,000 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளன. சரியாகச் சொல்வதானால் மோடி அரசு இந்தக் கொள்ளையர்களின் சாக்குப் பைகளில் மக்கள்பணத்தை அள்ளிக் கொட்டியுள்ளது.

இந்த 'பிரதான் மந்திரி ஃபசல் யோஜனா' திட்டத்தை இப்போது விவசாயிகள் நம்புவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இதனால் பெரிய பயன் இல்லை. சாய்நாத் சொன்ன எடுத்துக்காட்டையே பார்ப்போம். விவசாயிகள் செலுத்திய பிரீமியம் 19.2 கோடி அவர்களுக்குக் கிடைத்தது வெறும் 30 கோடி. அவர்களின் இழப்போடு ஒப்பிடும்போது அவர்களுக்குக் கூடுதலாகக் கிடைத்த இந்தப் பத்துக் கோடி யானைப் பசிக்குச் சோளப் பொறி. மொத்தத்தில் இந்த விளையாட்டில் மூட்டை மூட்டையாய் அள்ளிச் சென்றவர்கள் கார்பொரேட்கள்தான்.

பா.ஜ.க ஆளும் நாங்கு மாநிலங்களில் மட்டும் இப்போது 84 இலட்சம் விவசாயிகள் இந்த பிரதான் மந்திரி திட்டத்திலிருந்து விலகி ஒட்டியுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக நமக்குக் கிடைத்துள்ள உண்மை.

-Marx Anthonisamy


;