#இந்திய_கம்யூனிஸ்ட்_இயக்கம் - 2
கையூர் போராட்ட தியாகிகளான
அப்பு, குஞ்ஞாம்பு, சிறுகண்டன், அபூபக்கர் ஆகிய நான்கு பேருக்கும் பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதிக்கிறது. அவர்களை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷி. தோழர்களிடம் பேசுகிறார்.
“தோழர்களே, நாம் அனுபவித்த துயரங்களை இந்தியாவில் இனி எந்தவொரு தந்தையும், தாயும் அனுபவிக்கக் கூடாது எனும் உன்னத லட்சியங்களுக்காக இன்னுயிரை
இழக்க துணிந்த உங்களைப் போன்றவர்களை பெற்றதால்
மொத்த கட்சியும் பெருமிதம் கொள்கிறது. உங்களை சந்தித்த
இந்த நாள் எனது வாழ்நாளிலேயே
மிகச் சிறப்பானதாகும். இங்கே சிறைச்சாலைகளில் தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் பூக்கள் விரைவில் வாடிவிடும். ஆனால் மனித குலத்தின் சிறந்த மலர்களான உங்களுக்கு
என்றும் அழிவில்லை”..
கண்ணீர் ததும்ப நின்று
கொண்டிருந்த பி.சி.ஜோஷியிடம் சிறுகண்டன் பேசுகிறார்.
“விவசாயிகளின் மகன்களான
எங்கள் நால்வரை இந்த அரசு
தூக்கில் போட்டு விடலாம். ஆனால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளை இந்த அரசால் ஒரு போதும் அழித்து விட முடியாது."
அப்பு சொல்கிறார்.
“கட்சி வலிமையோடு வளர்ந்து வரும் செய்தியினை கொண்டு
வந்துள்ளீர்கள் தோழர். எனவே முன்னிலும் வலிமையோடு நாங்கள் தூக்கு மேடையை எதிர்கொள்வோம்.” தலைவருக்கு விடை கொடுத்து அனுப்புகின்றனர் நால்வரும்..
கேரள திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் புன்னப்புரா, அம்பலப்புழா, சேர்த்தலா, வயலாரிலும், மகாராஷ்ட்ரா தானே மாவட்டத்தின்
உம்பர்காவ்ன், தஹானு, பால்கர்,
ஜவகர் பகுதிகளிலும்,
அசாமில் சுர்மா பள்ளதாக்கிலும், ஹைதராபாத் நிஜாம் ஆளுகையின் தெலுங்கானாவிலும்,
தமிழகத்தின் கீழ் வெண்மணியிலும்
இன்னமும் இன்னமுமாய்
தேசம் முழுவதும்
ஆறாக ஓடிய குருதியெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீரப்புதல்வர்களுடையதே..
ஆயிரம் ஆயிரமாய் உயிர்த்தியாகம் சிந்திய தோழர்களின் தியாகத் தடத்தில் நடந்து தான் விவசாயிகள் இன்றைக்கு டெல்லியில் வெற்றிக் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்..
ஆம். வரலாறு ஒரு போதும்
பின்னோக்கி போவதில்லை.
-ஆர். பத்ரி