facebook-round

img

கொரோனா கால நகைச்சுவை கதை - 1

கொரோனா ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் தங்கியிருந்த மதுரைக்காரர் சண்முகம் (45) சொந்த ஊர் திரும்புவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். 

கொரோனா அச்சம் காரணமாக அதிக நபர்கள் ரயில் பயணத்தில் பங்கு பெற மாட்டார்கள். அதனால் ஜன்னல் ஓரம் இருக்கையை பிடித்து இயற்கை காற்றோடு மதுரை மண்ணில் காலடி வைக்க வேண்டும் என்ற கனவுடன்  முன்பதிவு செய்யாத பெட்டிக்கு டிக்கெட் எடுத்து இரவு நேரத்தில் பாண்டியன் ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்தார். 

சரியான நேரத்தில் ரயில் வந்தது. அவர் எதிர்பார்ப்புக்கு எதிராக ரயில் வரும் நேரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அடித்து பிடித்து ஒருவழியாக ஒரு இருக்கையை பிடித்தார். எனினும் அவர் ஆசைப்படி ஜன்னல் ஓர இருக்கை கிடைக்கவில்லை. ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு ஒரு திட்டம் தீட்டி பலமாக இருமினார்.நாம் இருமினால் நமக்கு கொரோனா இருப்பதாக கூறி ஜன்னல் இருக்கையில் இருக்கும் நபர் ஓடிவிடுவார் என்பதே அவரது திட்டம். திட்டத்தை போலவே பலமாக பலமுறை இருமினார். அடுத்த சில நொடிகளில் அந்த கோச் பகுதியில் இருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர்.

தனது திட்டம் வெற்றியடைந்ததை தனக்கு தானே கொண்டாடிவிட்டு கால்நீட்டி படுத்து நன்றாக உறங்கிவிட்டார். காலை 6 மணியளவில் டீ.... காப்பி...  டீ என்ற சத்தம் கேட்டது. எழுவதற்குள் ரயிலை சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் வந்தார். அவரிடம்,"மதுரை வந்ததை ஒரு வார்த்தை கூறினால் உங்கள் சொத்து குறைந்து விடவா போகிறது" என கோபத்துடன் கேள்வி கேட்டார். 

அதற்கு அந்த ஊழியர் நீங்கள் இன்னும் சென்னையில் தான் உள்ளீர்கள் எனக் கூற, ரயில் நிலையத்தின் தகவல் அட்டையை பார்த்தார் சென்னை எழும்பூர் என போடப்பட்டிருந்தது. ரயில்வே ஊழியரிடம் சண்முகம் விவரம் கேட்க, அவர்,"இந்த கோச்சில் இருந்த பயணி ஒருவர் கொரோனா தொற்று இருப்பது போல சந்தேகிக்கும் படி பலமாக இருமியதாகவும், அதனால் அந்த கோச்சில் பயணம் செய்ய முடியாது என பயணிகள் கூறினர். அதனால் இந்த பெட்டி கழற்றிவிடப்பட்டது என கூற, சண்முகம் தலையில் இடி இடித்தார் போல அதிர்ந்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியாமல் அடுத்த ரயிலுக்கு டிக்கெட் எடுக்க மீண்டும் அலுவலகம் சென்றார்.