facebook-round

img

அஸ்ஸாம் குடியுரிமைப்பிரச்சினை  4

பல ஆண்டுகளாக இங்கு இடம்பெயர்ந்து தங்களின் வேர்களை இழந்து இங்கேயே நிலைகொண்டுள்ள வங்கதேச முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்தக் குடியுரிமை (நீக்கச்) சட்டத்தின் இன்னொரு பக்கமாக இதற்கு இணையாக மோடி அரசால் இயற்றப்படும் இன்னொரு சட்டத்தை விரிவாகப் பார்த்தால்தான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் இந்தத் திட்டத்தை நாம் சரியாக இனங் காண முடியும். அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்ரேலின் 'அலியாஹ்' கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மோடி அரசின் குடி உரிமை மசோதா.

முதல் முறையாக மோடி அரசு பதவி ஏற்றபோது முன்மொழியப்பட்ட (ஜூலை 19, 2016) முக்கியமான சட்ட வரைவுகளில் ஒன்று 'குடியுரிமைத் திருத்த மசோதா 2016' எனும் அரசியல் சட்டத் திருத்த மசோதா. நாடாளுமன்றக் கூட்டுக் குழு அதனைப் பரிசீலித்து சென்ற ஜனவரி 07, 2019 ல் சமர்ப்பித்தது. அடுத்த நாளே தேர்தலுக்கு முன்னதாக அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திருனாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், AIMIM, AIUDF முதலான கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. இன்னும் அது மேலவையில் நிறைவேற்றப்படவில்லை.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர விரும்பும் குடிபெயர்ந்து வரும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத இந்திய மதத்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்யும் மசோதா இது. இந்திய மதங்கள் எனச் சொல்லப்பட்டாலும் அது இந்துக்களையே முன்வைத்து இயற்றப்படுகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை. டிசம்பர் 31,2014 க்கு முன் இம்மூன்று நாடுகளில் இருந்தும் மத அடிப்படையிலான ஒதுக்கல்களால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் முதலான இந்திய மதத்தவர்கள் இதனால் பயன்பெறுவர் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

இந்துக்கள் தவிர சட்டத்தில் குறிப்பீட்டுள்ள பிற சமணர்கள், கிறிஸ்துவர்கள் முதலானவர்கள் இந்த மூன்று நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் யாரும் இல்லை என்பதை அறிவோம். ஆக நடைமுறையில் இந்துக்களுக்கு மட்டும் பயனளிக்கும் சட்டம் இது. இதில் ஒதுக்கப்படுவது முஸ்லிம்கள் மற்Fறும் கிறிஸ்தவர்கள் மட்டும்.

இஸ்ரேலின் 'அலியாஹ்' சட்டத்தின் மறு வடிவமே இது...
*************************************************************
உலகின் எப்பகுதியிலிருந்தும் வருகிற யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இஸ்ரேலின் 'அலியாஹ்' எனப்படும் சியோனிசக் கொள்கையின் அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

"2014 தேர்தல் அறிக்கையில் - “அயல் உறவுகள்: தேசம் முதலில், அனைத்துலக அளவில் சகோதரத்துவம்” - எனும் தலைப்பின் கீழ் தம் அயலுறவுக் கொள்கையைக் கோடிகாட்டி இருந்தனர். அதில் இப்படி ஒரு வாசகம்:

“உலகெங்கிலும் துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஓர் இயற்கை இல்லமாக இந்தியா அமையும். அவர்கள் அடைக்கலம் புக இங்கே வரவேற்கப்படுவார்கள்”.

தங்களின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர்கள் இதை வலியுறுத்தத் தயங்கவில்லை. நரேந்திர மோடியே தன் தேர்தல் பிரச்சாரங்களில் வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்கள் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப் படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். இன்னொரு பக்கம் அவர் புலம் பெயர்ந்து வரும் வங்க முஸ்லிம்களை கொடூரமாகச் சித்திரிக்கவும், ஒட்டு மொத்தமாக அவர்களைத் திருப்பி அனுப்புவோம் எனச் சொல்லவும் தயங்கவில்லை.

எந்த அந்நிய நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டு இங்கு வந்தால் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் என அவர் சொல்லியிருந்தாரானால் நாம் அதை வரவேற்கலாம். ஆனால் துன்புறுத்தப்படும் இந்துக்கள் இடம் பெயர்ந்தால் மட்டும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் எனச் சொல்வதன் பொருளென்ன? இது ஒரு இந்துக்களுக்கான தேசம். இங்குள்ள அரசு ஒரு இந்து அரசு என்பதுதானே.

இப்படியான ஒரு கருத்தாக்கத்தை அவர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கின்றனர்?

இஸ்ரேலின் ‘அலியாஹ்’ (aliyah) எனப்படும் ‘திரும்புதல் சட்டம்’ என்பதுதான் இப்படியான அவர்களின் பேச்சுக்களுக்கு மூலாதாரம். இந்தச் சட்டத்தின்படி யூதர்கள் உலகில் எந்த நாட்டிலிருந்து வந்தபோதிலும் இஸ்ரேலில் வந்து குடியேறலாம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

இஸ்ரேலுக்கு இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் நிறைந்த, ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க இந்தியத் துணைக் கண்டத்திற்கு எப்படிப் பொருந்தும்?

காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகள் இம் மசோதாவை எதிர்த்த போதிலும் நாடாளுமன்றத்தில் AIMIM கட்சியின் அசாதுதீன் உவைசி மட்டுமே இஸ்ரேலுடன் பொருத்தி இந்தச் சட்டத்தை விமர்சித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

எனது "இந்துத்துவமும் சியோனிசமும்" நூலிலும் இதை விரிவாக விளக்கியுள்ளேன்.

(அடுத்த பதிவுடன் நிறைவுறும்)