election2021

img

மக்களுக்காக செயல்படாத அதிமுக அரசை தூக்கியெறிய சரியான தீர்ப்பை வழங்குங்கள்.... திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திரைக்கலைஞர் ரோகிணி பேச்சு.....

மதுரை:
மக்களுக்காக செயல்படாத அதிமுகஅரசை  தூக்கியெறிய சட்டமன்றத் தேர்தலில் சரியான தீர்ப்பை  மக்கள் வழங்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் திரைக்கலைஞர் ரோகிணி பேசினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்  மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய்க்கு ஆதரவாக திரைப்படக் கலைஞரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான ரோகிணி, தமுஎகச மாநிலப்பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வாக்குச்சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டனர்.  தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் (பிரசன்னா காலனி), மீனாட்சி நகர், திருப்பரங்குன்றம் (16 கால் மண்டபம்), பசுமலைதியாகராஜர் காலனி ஆகிய இடங்களில் வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.

அப்போது ரோகிணி பேசுகையில், அதிமுக அரசு மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்கு விரோதமான திட்டங்களை மட்டுமே இந்த அரசு செயல்படுத்தியது. நீட் நுழைவுத்தேர்வு, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, கேஸ் சிலிண்டர் விலைஉயர்வு  என பல உள்ளன. புதிய கல்விக்கொள்கையில் 3-வது , 5-வது, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வைநடத்துவது என்று உள்ளது.  இதனால் குழந்தைகளின் கல்வி பறிக்கப்படும். அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் தேர்வால் மாணவிகள் உயிரிழந்துள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் பொருட்களை வாங்குகிற சாதாரண மக்களும் சிறு குறு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். தில்லியில் 128 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.அவர்கள்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயி களுக்காக போராடி வருகிறார்கள். இதனை பிரதமர் மோடி கண்டுகொள்ளவேயில்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினாலோ  அல்லது கேள்வி கேட்டாலோ சிறையில் அடைப்பது, வழக்கு போடுவது என்று தொடர்ந்து மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது.தமிழக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்  பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவம், 13 உயிர்களை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என அனைத்தையும் பார்த்துவிட்டோம். எனவே இந்த அதிமுக அரசை தூக்கி எறிய  மக்கள் சரியான தீர்ப்பினை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அவனியாபுரம் பிரசன்னா காலனிஉள்ளிட்ட சில வீதிகளில் வீதி வீதியாகச்சென்று வாக்குச்சேகரித்தார். பிரச்சாரத்தில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம்,  திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

;