election2021

img

சட்டமன்றத்திற்கு செல்ல என்னைவிட நூறுமடங்கு தகுதியானவர் சின்னத்துரை.... கவிச்சுடர் கவிதைப்பித்தன் உருக்கம்....

புதுக்கோட்டை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இலக்கிய அணியின் துணைத் தலைவராக இருப்பவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். முன்னாள் முதல்வர்கலைஞர், பேராசிரியர் அன்பழகன், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களிடம் மிக நெருக்கமான நட்பையும் அன்பையும் பெற்றவர். 

கலைஞர் தலைமையில் அப்துல்ரகுமான், வைரமுத்து உள்ளிட்ட பெருங்கவிஞர்களுடன் பல கவியரங்கங் களில் முத்திரை பதித்தவர். முரசொலியில் வரும் இவரது கவிதைக்கு தனிரசிகர் பட்டாளமே உண்டு. பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பிறகு மரபுக் கவிதையில் சாமானிய மக்களையும் ஈர்க்கும் வகையில் மொழி ஆளுமை பெற்றவர். மிகச் சிறந்த இலக்கிய சொற்பொழிவாளர். அரசியல் பேச்சாளர் என பல திறமைகளை உள்ளடக்கியவர்.

கவிதைப்பித்தன் நடைபெறவுள்ள கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு அவரது கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்திருந்தார். தனக்கு தொகுதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையோடு காத்திருந்தார். இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தனக்கு தொகுதி ஒதுக்கவில்லையே என்று சிறிதும் வருத்தப்படாமல் கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர்சின்னத்துரையோடு அதிகாலை தொடங்கி இரவு வரை அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தில், சட்டமன்றத்திற்கு என்னை விட நூறுமடங்கு தகுதியானவர் சின்னத்துரை. இவரை வெற்றிபெறச் செய்தால் இந்தத் தொகுதிக்கு தேவையான அனைத்துத் தேவைகளையும் சின்னத்துரையோடு சேர்ந்து நானும் நிறைவேற்றுவேன். எனவே, சின்னத்துரையை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்