சிவகாசி:
சிவகாசி தொகுதி மக்களின் கடும் அதிருப்தியாலும், தோல்வி பயத்தாலும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதியிலிருந்து இராஜபாளையம் தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது சிவகாசி சட்டமன்றத் தொகுதி. இங்கு கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக வலம் வந்தார். 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் சிவகாசி தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக பால்வளத்துறை அமைச்சராக வலம் வந்தார்.2020-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, மீண்டும் சிவகாசியில் போட்டியிட்டால் “அண்ணன் தோற்பார்” என அதிமுகவினர் அடித்துக் கூறினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் யாரும் தொகுதி மாறக் கூடாது, அது கட்சிக்கான மரியாதையை மக்களிடம் இருந்து குறைக்கும் எனக் கூறியதாகவும், இதனால், ராஜேந்திரபாலாஜி மீண்டும் சிவகாசியிலேயே போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தலைமையிடத்திலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.அதேநேரத்தில் பிற அமைச்சர்கள் யாரும் தொகுதி மாறாத நிலையில், தோல்வி பயம் காரணமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு மாறிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.இவர் ஓட்டமெடுத்தது மட்டுமல்ல, இவரது ஆதரவாளர்களான திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோருக்கு அதிமுக தலைமை சீட் கிடைக்காமல் கழற்றிவிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.