மதுரை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் களம் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 18 வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வேட்பாளர்களை வாழ்த்தி பேரணியாக சென்று,வேட்புமனு தாக்கல் செய்திட அனுப்பிவைத்தனர்.
கீழ்வேளூர் - நாகை மாலி
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி,கீழ்வேளூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஊ.மதிவாணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் பங்கேற்ற னர்.
முன்னதாக கீழ்வேளூர் தேர்தல் பணிக்குழு செயல்வீரர்கள் கூட்டம் திமுக நாகை மாவட்டச் செயலாளர் கவுதமன் தலைமையில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள்பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் வெள்ளமெனத்திரண்டு பேரணியாக கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர்.
திருப்பரங்குன்றம்- எஸ்.பொன்னுத்தாய்
திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் வியாழனன்று காலை 11.25 மணிக்கு திமுக தெற்கு மாவட்டத் துணைச் செயலாளரும் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பாலாஜி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.முருகேஸ்வரியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் வேட்பாளர் பொன்னுத்தாய் பேசுகையில், “திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கவும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் கொடுப்பேன். நவீன வடிவத்தில் நூதனமான பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனதுவெற்றிக்காக தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில்ஈடுபடுவர்” என்றார்.
திண்டுக்கல் - என்.பாண்டி
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி, திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக நகர செயலாளர் ராஜப்பா ஆகியோர் உடனிருந்தனர். மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர் பாண்டிக்கு கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, “திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் வேட்பாளராக நான் போட்டியிடு கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர் கள் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை யில் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதி” என்று வேட்பாளர் என்.பாண்டி கூறினார்.
முன்னதாக திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, பழனி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கோவில்பட்டி - கே. சீனிவாசன்
கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுதாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி பழையபேருந்துநிலையம் அருகிலிருந்து மாபெரும்பேரணி புறப்பட்டது. வேட்பாளர் சீனிவாசனு டன் திமுக மகளிரணித் தலைவரும், தூத்துக்குடிநாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிமற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் மனுத்தாக்கல் செய்த போது கனிமொழி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் கே.சீனிவாசன், 10லட்சம் பேருக்கு வேலை என்கிற திமுகவின் அறிவிப்பை இளைஞர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்; அதில் கோவில்பட்டி தொகுதியில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார்ப்படுத்தும் பணி உட்பட மக்கள் பிரச்சனை களுக்கு உறுதியான முறையில் தீர்வுகாண் போம் எனக் கூறினார்.
கனிமொழி எம்பி., பேட்டி
அப்போது உடனிருந்த கனிமொழி எம்.பி.யிடம், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, ஆளுங்கட்சியினர் இதைத்தான் முக்கியமான தேர்தல் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் திமுகவோ கூட்டணிக் கட்சிகள் இருப்பவர்களோ அஞ்சப்போவதில்லை. உண்மை நிச்சயமாக வெளிவரும் குடியுரிமை சட்டம் வந்த போது நாங்கள் அத்தனை பேரும் எதிர்த்தோம். ஆனால் அதிமுக ஆதரித்து சட்டம் நிறைவேற உதவியது. இப்போது குடியுரிமை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக கூறுவது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் முயற்சியாகும் என்று கூறினார்.
அரூர் ஏ.குமார்
அரூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.குமார் வியாழனன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.வேட்பாளர் ஏ.குமார் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே.முத்தையனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில், திமுக மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை.விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் கி.ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி அரூர் கிளைஅலுவலகத்திலிருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக ஏ.குமார் வந்தார். இந்த ஊர்வலத்தில் தோழமைக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்ட னர். இந்த ஊர்வலம் அரூர் ரவுண்டனா, பேருந்துநிலையம், கடைவீதி, பாட்ஷா பேட்டை, சேலம்நெடுஞ்சாலை வழியாக தேர்தல் நடத்தும் அலுவலகம் வந்தடைந்தது. வரும் வழியில் வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குமாருக்கு உற்சாக வரவேற்புஅளித்தனர். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், ஜி.ஆனந்தன், பத்ரி மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், சந்திரமோகன், செளந்தரராஜன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் முகமது அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தொகுதி துணை செயலாளர் கேசவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன், ஒன்றியச் செயலாளர் செங்கொடி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாவட்டச் செயலாளர் செந்தில்முருகன், மதிமுக ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், காங்கிரஸ் கட்சி சுபாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எம்.சின்னதுரை இன்று வேட்புமனு
கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை மார்ச் 19 வெள்ளியன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
படக்குறிப்பு :
1.சிபிஎம் வேட்பாளர்கள் - கீழ்வேளூரில் நாகைமாலி, திருப்பரங்குன்றத்தில் எஸ்.பொன்னுத்தாய், கோவில்பட்டியில் கே.சீனிவாசன், திண்டுக்கல்லில் என்.பாண்டி, அரூரில் ஏ.குமார் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
2.கோவில்பட்டி தொகுதி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்ய, திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ கோவில்பட்டி வீதிகளில் சென்ற காட்சி.