திண்டுக்கல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 16 அன்று இரவில் வீதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இளம் வாக்காளர்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் மாநகரத்திற்கு செவ்வாய்க்கிழமையன்று இரவு வருகை தந்த மு.க.ஸ்டாலின் அண்ணா சிலை அருகேயிருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச்செயலாளர் பி.ஆஸாத், ஒன்றியச்செயலாளர் தா.அஜாய்கோஷ் ஆகியோர் அவரை வரவேற்றனர். இதனையடுத்து சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியுடன் நகர வீதிகளில் வாக்கு கேட்டு மு.க.ஸ்டாலின் நடந்துசென்றார். இதனால் பொதுமக்கள் மற்றும் திமுக, சிபிஎம், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். கையசைத்து வாக்குச்சேகரித்து சென்ற ஸ்டாலினை காண மக்கள் திரண்டனர். இளைஞர்கள் ஓடி வந்து அவருக்கு கைகொடுத்தனர். இளம் பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அண்ணா சிலை, காமராஜர் சிலை, பெரியார் சிலை, மாநகராட்சி அலுவலகம், மணிக்கூண்டு, பழைய தலைப்பாகட்டி பிரியாணி கடை, மாநகராட்சி பின்புறமாக சென்று கணேஷ் தியேட்டர் அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்த எழுச்சிமிகு பிரச்சார நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, முன்னாள் அரசு கொறடா அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்டச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன், நகரச்செயலாளர் ராஜப்பா, ஒன்றியச்செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)