விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வியாழனன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
42 பக்கங்களில் 25 தலைப்புகளை கொண்ட அந்த அறிக்கையில், தலித், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் தீய உள்நோக்கோடு, பாஜகமற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான சதிமுயற்சிகளையும் முறியடித்து சமூக நீதியைப் பாதுகாப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்கால கனவுத் திட்டமான இந்து ராஷ்டிரத்தை அமைக்கபெருந்தடையாக உள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தை மெல்ல மெல்ல நீர்த்துப்போகச்செய்யும் பாஜகவின் சூது, சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம் என்றும் அதற்காக அனைத்துஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்துப்போராடுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய, சார்பு பொருளாதாரக் கொள்கைகளையும் அதனடிப்படையிலான தனியார்மயம், கார்ப்பரேட் மயத்தை தடுத்துநிறுத்த தொடர்ந்து மக்களை அரசியல்படுத்துவோம், மொழி வழி மாநிலம், மாநிலஉரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து அரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த குறிப்பாக, சட்டம் இயற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயகசக்திகளோடு ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம். சாதியின் பெயரால் மற்றும் மதத்தின்பெயரால் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும் அதனடிப்படையிலான சமூகப் பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணியப்படுத்துவோம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்கு ஜனநாயக சக்திகளைத் தீவிரவாதிகள், தேச விரோதிகள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி, அவர்களுக்குஎதிராக ஏவப்படும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடுவோம், ‘ஒரே தேசம் - ஒரே கல்வி’ என்னும் அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம்’ என்னும் சங்பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம். மாநில அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்யதொடர்ந்து களமாடுவோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “சனாதன பெருமுதலாளிகளின் கூட்டணி பாசிசத்தை விரட்டிஅடிப்போம்,சமூக நீதியை மீட்டெடுப்போம்,பெரும் முதலாளிகளின் காவலன் பாஜகவைசுமந்துகொண்டு வரும் அதிமுகவையும் மக்கள் ஓடஓட விரட்டி அடிப்பார்கள் என்றார்.துரை.ரவிக்குமார் எம்.பி., மாவட்டச் செயலாளர் சு.ஆடலரசு உட்பட பலர் உடனிருந்தனர்.மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.