சென்னை:
தமிழக நலன்களுக்கு எதிராக உள்ள பாஜக - அதிமுக அணியை வீழ்த்துவது என்ற ஒற்றை நோக்கத்தோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரத்தை மையப்படுத்தியும், தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை நிலமாக உள்ளதால் நீர்வளத்தை பாதுகாப்பது, சேமிப்பது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் உள்ளோம். தமிழ்வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சனை, தொழில்வளர்ச்சி, பெண்கள் பாது காப்பு, சமூக சாதிய ஒடுக்குமுறை, ஆணவப்படுகொலை போன்றபிரச்சனைகளை பிரதானமாக அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம். கையால் மலம் அள்ளும் இழிநிலை, சாக்கடைக் குழிக்குள் மனிதர்களை இறக்குவது போன்ற வற்றை ஒழித்து அந்தப்பணிகளை செய்வோருக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், நிலச் சீர்திருத்தத்தை அமலாக்கி உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்துவோம் என்பதை
வாக்குறுதிகளாக அறிக்கையில் கொடுத்துள்ள்ளோம்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
சாதாரணமாக பெண்கள்மீது பாலின வன்முறை தாக்குதல் நடைபெறுவது மட்டுமின்றி, பெண் காவல் அதிகாரிக்கு உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவு எனபாதுகாப்பற்ற நிலை உள்ளது. கடும் போராட்டத்திற்கு பிறகே அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நிலை உருவாகி உள்ளது.ஸ்டான்லி மருத்துவமனை அறுவை சிகிச்சை பேரா.சந்திரசேகரன், முதுநிலை பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதுதொடர்பாக பலமுறை டீனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சூழலில்,மாணவிகள் போராட்டத்திற்கு செல்வோம் என எச்சரித்துள்ளனர். தற்போது அவரை இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபருக்குபணிமாற்றம்தான் தண்டனைஎன்பதாக தமிழக அரசின் அணுகுமுறையாக உள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், முன்னெப்போதும் இல்லாதபடி அச்சப்படும் வகையில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பாரபட்சமான தேர்தல் ஆணையம்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், பாஜக-அதிமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை நோக்கத்தோடு ஒன்றிணைந்து இருக்கிறோம். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒரு பிரச்சனையில் ஒரே நிலைபாட்டுடன் இருக்க முடியாது. மாறுபட்ட அணுகுமுறைகள் இருக்கும். படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 3 தலைமுறைக்கும் மேலாக வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தரவேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்றார்.
ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் ஆணையத்தை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியிடம் விதிகளை பின்பற்றச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு விதிக்கும் விதிகளை, ஆணைகளை ஆளும் கட்சியை பின்பற்ற வற்புறுத்துவதில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமான அணுகுமுறையோடு செயல்படுகிறது. இந்த தேர்தலிலாவது மத்திய, மாநில அரசுகளின் கட்டாயத்திற்கு பணியாமல், நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தேர்தல் அறிக்கை
மாநில உரிமைகள், தமிழ்மொழி வளர்ச்சி, கல்வி,சுகாதாரம், சுற்றுச்சூழல், அகழாய்வு மற்றும் பண்பாடு,ஜனநாயக உரிமை பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேளாண்மை, நீர்ப்பாசனம், தொழிலாளர் நலன், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் நலன்,இலங்கை தமிழர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலன், நிர்வாகச் சீர்திருத்தம்,நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி, கூட்டுறவு, மனைப்பட்டா, நிதி நிறுவனங்கள், மனித உரிமைகள், அரசுஊழியர், ஓய்வூதியர், மீனவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநர் நலன், வேலைவாய்ப்பு, வன்கொடுமை என 50 தலைப்புகளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வின்போது மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், எஸ்.கண்ணன், தீபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தொகுப்பு 1-ஆம் பக்கம் மற்றும் 3-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுப்பில் ஒரே தொகுப்பாக உள்ளது.