election2021

img

பேரம் படியாததால் விலகியது தேமுதிக.... அதிமுக-பாஜக கூட்டணிக்குள் முதல் வெடியைப் போட்ட விஜயகாந்த்....

சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகள் பேரம் படியாததால் அதிமுககூட்டணியிலிருந்து தேமுதிக கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை யன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இந்த அறிவிப்பால் அதிமுகவும் பாஜகவும் அதிர்ச்சியடைந்துள்ளன. தேமுதிக பொறித்துப்போட்ட வெடியானது  அதிமுக கூட்டணியை கலகலக்க வைத்துள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுசுமூகமாக முடிந்துவிட்டது. ஆனால்அதிமுக கூட்டணிக்குள்  பல்வேறு இழுபறிகள் நடந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாமகவுக்கு23 சட்டமன்றத் தொகுதிகளை அதிமுகஒதுக்கியது. கூட்டணிக்குள் பாமகவை தக்கக்க, தேர்தலுக்காக, வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை  அவசரஅவசரமாக நிறைவேற்றியது அதிமுகஅரசு. அதேநேரத்தில் தமிழகத்தின் எந்த தொகுதியிலும் மக்கள் ஆதரவேஇல்லாத பாஜகவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவால் இரவோடு இரவாக  20 தொகுதிகளை அள்ளிக்கொடுத்தது.  ஆனால் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடகழக (தேமுதிக) கட்சியை ஆரம்பம்முதலே தனிமைப்படுத்தி வந்ததுஅதிமுக. இதனால் தேமுதிக தொண்ட ர்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்தனர்.  

வடமாவட்டங்களில் மட்டும் வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவுக்குஇவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி வைத்திருக்கும் தங்க ளுக்கு, அதைவிட கூடுதலாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தேமுதிக பிடிவாதம் பிடித்தது. கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவது இல்லை என்று அதிமுகவும் அதே பிடிவாதத்துடன் நின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய 41 தொகுதிகளை கேட்ட தேமுதிக, பின்னர் கொஞ்சம் இறங்கி வந்து, 25 அல்லது 23 கொடுங்கள் என்றது.  அதையும் ஒப்புக்கொள்ளவில்லை  அதிமுக. 15தொகுதிகளுக்கு மேல் ஒன்று கூட கிடையாது என்று கூறி தேமுதிகவிற்கு அதிர்ச்சிகொடுத்தனர் அதிமுக பெருந்தலைகள். தேமுதிக இல்லையென்றால் அதிமுகஆட்சி அமைத்திருக்கவே முடியாது என்றுதேமுதிக தலைவர்கள் பேசிவந்தனர். தனித்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவ்வப்போது இவர்கள் பங்கிற்கு அதிமுகவை நெருக்கினர். இதையடுத்து அதிமுக அமைச்சர்கள், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை சந்தித்துப் பேசினர்.  

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 23 தொகுதிகள் என்ற கோரிக்கையுடன்  தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்துபேசினார். ஆனால் அதிமுக தரப்பிலோ, 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாக சொல்லப்பட்டது. கடைசி வரை கேட்ட தொகுதிகள் பேரம் படியாததால் கொதிப்படைந்த தேமுதிக தலைமை, அதிமுக  கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்ய செவ்வாயன்று மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைமை மார்ச் 9 செவ்வாயன்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கொந்தளித்த எல்.கே.சுதீஷ் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்  தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும். கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று கொந்தளித்தார்.ஆலோசனைக் கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள்,  “அவர்கள் ஒன்பது சீட்டுகளில் இருந்து என்றைக்கு ஆரம்பித்தார்களோ அப்போதே நாம் கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வந்து இப்படிச் சொல்கிறீர்கள். நாம் கூட்டணியில் இருந்து விலகுவதைத் தவிர வேறுவழியில்லை. அதிமுக தலைமையிலேயேசிலர் பாமகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டோடும் தேமுதிகவை வெளியேற்றும் முயற்சியோடும் இருக்கிறார்கள். எனவே தாமதமான இந்த முடிவை இப்போதாவது நாம் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.கூட்டணியில் தனக்காக பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதால் பாஜக மீதும் தேமுதிக தலைமை நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர். பண்ருட்டியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், ‘‘அதிமுகவிற்குத்தான் இனிஇறங்குமுகம். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார். அவரது சொந்த தொகுதியிலேயே பழனிசாமி மண்ணை கவ்வுவார்” என்றார்.அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதை தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.