மதுரை:
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையிலான அணியானது, ஒப்பந்ததாரர்கள், சில அரசுஅதிகாரிகள் துணையோடு பண விநியோகத்தில் ஈடுபடவுள்ள தகவல் வெளியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை யன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சர்வேக்கள், சில ஆய்வுகள் திமுக தலைமையிலான அணி வெற்றிபெறும் எனத் தெரிவிக்கின்றன. இது சட்டமன்றத் தேர்தலில் பளிச்சென வெளிப்படும்.நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிகமான இடங்களில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெறும். அதிமுக - பாஜக தலைமையிலான அணி, ஒப்பந்ததாரர்கள், சில அரசு அதிகாரிகள் துணையோடு வாக்காளர்களை விலை பேசும் விதத்தில் பண விநியோகத்தில் ஈடுபடஉள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. பண விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். அவர்கள் யார், யார் என்பது அப்போது தெரியவரும். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக் களின் உணர்வுகளை மதிக்காமல் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுத்துறையே இருக்கக் கூடாது என மோடி கூறுகிறார். மதுரைவிமான நிலையம், திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை விற்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோவில்களும் கொள்ளை போகுமோ?
தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள், கோவில் நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை தனியாரிடம் கொடுக்கப்போவதாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையின் சொத்துக்களை ஆன்றோர்கள், சான்றோர்களிடம் ஒப்படைப்போம் என்ற பெயரில் சூசகமாக அறிவித்துள்ளது. யார்அந்த ஆன்றோர்கள், சான்றோர்கள். இவர்களுக்கு என்ன அளவுகோல்? இவர்களை கண்காணிப்பது யார்? என்பதற்கெல்லாம் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் சரியான நடைமுறை. இதற்கு மாறாக, மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்தி தபால் வாக்கு பதிவிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருமாறு கூறுவது பொருத்தமான நடவடிக்கையல்ல.” என்றார்.
கண்ணீர் வடிக்கும் பெண்கள்
அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம் எனக்கூறி சிலிண்டர் படங்களுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவர்கள் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2 சிலிண்டர்களையாவது இலவசமாக வழங்கியிருக்கலாம். சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் 6 சிலிண்டர்கள் இலவசம் என்பது ஒரு ஏமாற்று வேலை. தற்போது சிலிண்டர் விலை ரூ.900-க்கு விற்கப்படுகிறது. அதிமுகவின் சிலிண்டர் பிரச்சாரத்தை பார்க்கும் பெண்கள் அதன் விலைஉயர்வை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். அதிமுக அரசு கடந்தகாலங்களில் மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வழங்குவோம். வை-பை வசதி செய்து தருவோம். 10 லட்சம் வீடுகள் கட்டித்தருவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இவற்றை நிறைவேற்றாமல் தற்போது புதிய வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்கிறது. இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.