election2021

img

வகுப்புவாத சக்திகளை எங்கள் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்... கேரளத்தில் மீண்டும் நாங்களே ஆட்சிக்கு வருவோம்...முதல்வர் பினராயி விஜயன் பேட்டி....

கண்ணூர்:
கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணியே ஆட்சிக்கு வரும்; வகுப்புவாத சக்திகளை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று அம்மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:கடந்த ஜூலை மாதத்தில் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது இருந்தே எங்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தொடங்கி விட்டது. மத்திய அரசின் கீழ்வரும் சில விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு இங்கிருக்கும் பாஜக தலைவர்கள், தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசின் பெயருக்கு களங்கம் வரும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை எழுப்பினர்.விசாரணை அமைப்புகளும், சில ஊடகங்களும் அதற்கு உரம்போட்டு எங்களுக்கு எதிராக அதை வளர்த்து விட்டனர். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் எங்களுக்கு எதிராக சதி நடப்பதாகச் சொன்னேன். முதல்வர் அலுவலகம் மீது குற்றச்சாட்டு சொன்ன முதல்நபரே இப்போது பின்வாங்கிவிட்டதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நான் இப்போது அவரது பெயரைச் சொல்லவும் விரும்பவில்லை.

தங்கக் கடத்தல் வழக்கில், விசாரணையின் போக்கு தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது. நானுமே அதைப் பாராட்டினேன். பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் ஒருகட்டத்தில் விசாரணையின் போக்கு உண்மையான குற்றவாளிகளை மறைக்கும் நிலைக்கு சென்று விட்டது. விசாரணையின் பார்வை எங்கள் அரசின் கொள்கை மற்றும் திட்டங்களைக் குறிவைத்துத் திரும்பியது. காங்கிரசும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என விமர்சிப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. என்றாலும், இந்து ராஜ்ஜியத்தை நிறுவும் நோக்கோடு இருக்கும் ஆர்எஸ்எஸ் போன்று எந்த பாசிச அமைப்பின் கட்டுப்பாட்டிலும் காங்கிரஸ் இல்லை. பாஜகவை உண்மையாகவே களத்தில் இருந்து எதிர்க்கும் இடதுசாரிகள், அதற்காக பிறமாநிலங்களில் காங்கிரஸை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அதீத எச்சரிக்கை உணர்வுடனேயே அதை செய்கிறோம்.நாங்கள் கேரளத்தில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியைக் காட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு நாங்கள் செய்த பணிகள் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு வருகிறோம். மக்களே எங்களின் கண்காணிப்பாளர்கள். 

கூட்டுறவு மற்றும் பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவித்துள்ளோம். உணவு, கல்வி, உடல்நலம், ஓய்வூதியம், குடிநீர், மின்சார இணைப்பு போன்ற மக்களுக்கு தேவையான பல விஷயங்களைச் செய்துள்ளோம். அதனால் மக்கள் எங்களைக் கைவிடமாட்டார்கள். இந்தப் பணிகள் தொடரவேண்டும் என மக்களும் விரும்புகிறார்கள். ஆனால் ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டதிட்டங்களுக்கும் சவால்விடும் வகையில் ஒரு கூட்டுமுயற்சி நடக்கத்தான் செய்கிறது. மத்திய அரசே அதற்கு முயற்சிக்கிறது. கேரளம் மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம். இந்த நிலமே மதச்சார்பின்மைக்கு உறுதி பூண்டுஉள்ளது. மனதின் அடியாழத்தில் இருந்து மனிதநேயத்தோடு சிந்திக்கும் மாநிலம் கேரளம். இங்கே மக்கள் மதப்பற்றின் அடிப்படையில் சிந்திப்பது இல்லை. மனிதத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர். அதனால்தான் சொல்கிறேன், வகுப்புவாத சக்திகளுக்கு கேரளத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது. கேரளத்தில் பாஜக-வுக்கு எதிர்காலம் இருப்பதாக தோன்றவில்லை.சபரிமலை விவகாரத்திலும் எங்களைக் குறைசொல்ல முடியாது. மாநில அரசானது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத்தான் கேரள அரசு செயல்படுத்தியது. எனவே, சபரிமலை ஐயப்பனின் பற்றாளர்கள் பக்கம் நாங்கள் இல்லை என யாரும் எங்கள் அரசை குறைசொல்ல முடியாது.

அதுமட்டுமல்ல, கொரோனா காலத்திலும்கூட வருமானம் இல்லாத கோயில்களில் தடையின்றி பூஜைகள் நடப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக ‘சபரிமலை மாஸ்டர் திட்டம்’ என்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இப்போது கூடுதலாக ஒதுக்கியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் கேரளம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க ரூ. 50 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வகுத்தோம். ஆனால் அதையும் தாண்டி, ரூ. 63 ஆயிரத்து 200 கோடிகளுக்கு திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். முதியோர், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 600 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட கேரளத்தில் யாரும் பசித்த வயிறுடன் இல்லை. 

கடந்த ஐந்தாண்டுகளில் ஒக்கி புயல், நிபா வைரஸ், அத்துடன் இரண்டு பெருவெள்ளத்தையும் எதிர்கொண்டோம். ஆனால் அப்போதும் மக்களின் பக்கம் நின்று அவர்களின் பெருந்துயரைப் போக்கினோம். இதையெல்லாம் பெரிய சாதனையாக நான் மட்டும் சொல்லவில்லை. மக்களும் சேர்ந்தே சொல்கிறார்கள். மக்கள் மீண்டும் ஆட்சியை எங்களுக்குத் தருவார்கள். ஐந்தாண்டு சாதனைகள் அதற்குக் கைக்கொடுக்கும்.இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.