election2021

img

இடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....

மேற்குவங்கத்தில் 24 நாடுகளைப் போன்ற 24 பர்கானா மாவட்டங்களில் இழந்து போன பெருமைகளை மீட்டெடுப்பதற்கான மாபெரும் போராட்டத்தை இடது ஐக்கிய முன்னணி நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரத்தின் தெற்கு - வடக்குபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் 64 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடும் மும்முனைப் போட்டி எல்லா இடங்களிலும் நிலவுகிறது. 

மிகப்பெரிய இந்த பகுதி வங்கதேச எல்லையான பாக்தாக் முதல் தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை நீண்டு கிடக்கிறது. 1986ல் தெற்கு வடக்கு24 பர்கானாக்களாக பிரிப்பது வரை பெரிய பகுதியாக இருந்தது. மேற்கே ஹூக்ளி நதிக்கும் கிழக்கே இச்சாமதி நதிக்கு இடையிலும் இருக்கிறஇப்பகுதி வங்கதேசத்துடன் 366 கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டதாகும். சுந்தரவனம் என்ற அறியப்படுகிற உலகின் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய டெல்டா - கண்டல் காடுகள் இந்த மாவட்டங்களில் தான் இருக்கிறது. ‘பெங்கால் டைகர்’ என்ற பெயரில் அறியப்படுகிற நரிகள் சரணாலயமும் இங்கு தான் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பான்மையோர் தேச பிரிவினை காலத்தில் கிழக்கு வங்கத்திலிருந்து வந்து குடியேறியவர்களும் அவர்களின் தலை முறையினரும் ஆவர். 1977ல் இடது முன்னணி அரசுஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு தான் அவர்களை நிரந்தர குடியேற்றக்காரர்கள் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. 

தற்சமயம் சிறப்புகளை இழந்திருந்தாலும்,  தொழில்துறையும் விவசாயமும் ஒரே போல பெருமையுடன் இருந்த இடம் தான் வடக்கு - தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள். உலகிலேயே மிகவும் அதிகமான சணல் ஆலைகள் இயங்குவது இந்த மாவட்டங்களில் தான். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கே வேலை வாய்ப்பு பெற்றிருந்தார்கள். வடக்கு 24 பர்கானாவின் டம்டம், பாரக்பூர், பாராநகர், டிட்டாநகர், நைஹட்டி என்பவையும் தெற்கு 24 பர்கானாவின் பட்ஜ் படஜ், மெட்டியாபுர்ஸ், மகேஷ்தலா, கார்டன்ரீச் ஆகியவை தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகள். மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வந்த ஐடி துறையின் மிக முக்கியமான மையமாக சால்ட்லேக், ரஜார்ஹட்போன்றவை வடக்கு 24 பர்கானா மாவட்டங்களில் செயல்படுகிறது. பிதான் சந்திர ராய் முதலமைச்சராக இருந்த போது தான் கொல்கத்தாவின் துணை நகரமாக சால்ட் லேக்கிற்கு வடிவம் கொடுத்தார். இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் ரஜார்ஹட் ஐடி தொழில்நுட்ப நகரத்தை உருவாக்கினார்கள். இதன் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை இடது முன்னணி அரசு கொண்டு வந்தது. தாமதமானாலும் உலகத்தர ஐடி கம்பெனிகள் பல இங்கே வர ஆரம்பித்தது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தெற்கு 24 பர்கானாவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவானது. கொல்கத்தாவின் அருகே இருந்த மாவட்டங்களில் நகர விரிவாக்கம் வேகமாக நடந்தது. விவசாயத்தை அடிப்படையாக வைத்து பல தொழில்கள் வளர்ந்தது.

மம்தா ஆட்சியில் வீழ்ந்த ஐ.டி.துறை வளர்ச்சி      
மத்திய அரசுகளின் தவறான கொள்கைகளால் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி 24 பர்கானாவிலும் பாரம்பரியமான பல தொழில் நிறுவனங்களும் நலிவடைந்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. அத்துடன் இடது முன்னணி அரசின் தொழில் வளர்ச்சி திட்டங்களை குழி தோண்டி புதைப்பதற்காக மம்தா பானர்ஜி நடத்திய அட்டூழியங்களும், அராஜக செயல்களும் தொழில்களை இல்லாமல் செய்தது. இது ஐடி துறைகளின் நம்பிக்கையையும் இழக்கச் செய்தது. எண்ணற்ற கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டது. வேலையிழந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். ஒரு காலத்தில் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றியிருந்தது. பிறகு இடதுசாரிகள் பலவீனப்பட்டார்கள். தொழில்துறையில் ஏற்பட்ட மந்த நிலையும், மம்தா பானர்ஜியால் அவிழ்த்து விடப்பட்ட தொழில் வளர்ச்சிக்கு எதிரான அநீதியான போராட்டங்களும், இடது முன்னணி ஆட்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களும், ஒரு பகுதி மக்களை நம்பச் செய்ததே இதற்குக் காரணம்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தது மூலம் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மறு சீரமைப்பு என ஏராளம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த மம்தாவின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள். மம்தாவின் பத்து வருட ஆட்சிக்காலத்தில் புதிதாகதொழிற்சாலைகளோ, ஐடி கம்பெனிகளோ வரவில்லை என்பதை விட மிகப்பெரிய சணல் ஆலைகள் உட்பட ஏராளம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 

நல்ல நிலையில் இயங்கி வந்த விப்ரோ உட்பட பல ஐடி கம்பெனிகளும் மம்தா அரசின் அலட்சியப் போக்கினால் இழுத்து மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் இதர மாநிலங்களுக்கு குடியேறினர். சணல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சிறுதொழில்களும் குடிசைத் தொழில்களும் முற்றாக அழியும் நிலை ஏற்பட்டது. திரிணாமுலின் கட்டுப்பாட்டிலிருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் ஊழல் கோட்டைகளாக மாறியது. 

மதவெறியை தூண்டும் முயற்சி
வடக்கு பகுதியில் 27 சதவீதமும், தெற்குப்பகுதி யில் 31 சதவீதமும் இஸ்லாமிய சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்த இங்குள்ள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் ஆதாயம் அடைய பிஜேபியும், திரிணாமுலும் ஒரே மாதிரி முயற்சிக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் இங்கே பலமதக்கலவரங்கள் நடந்தது. வடக்கு 24 பர்கானாவில் பிற்பட்ட சமூகமான மாத்துவ சமூகத்திற்கு குறிப்பிட்ட அளவு செல்வாக்குள்ளது. வங்கதேசத்தில் ஒராகண்டி என்ற இடத்தில் இப்போதும் அவர்களின் புராதன ஆலயம் உள்ளது. சமீபத்தில்வங்கதேசம் சென்ற பிரதமர் மோடி இந்த ஆலயத்திற்குச் செல்லவும், பூஜை நடத்தவும் தனிக்கவனம் செலுத்தினார். இந்த செய்தியை டிவிட்டரில் பதிவிட்டதோடு அதை வங்க மொழியில் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் நடைபெறும் நேரத்தில் பிரதமர் முதன் முறையாக வங்கதேசம் சென்றது இங்குள்ள வாக்காளர்களைக் கவர்வதற்கே என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 33 தொகுதிகளும், தெற்கு பர்கானா மாவட்டத்தில் 31 தொகுதிகளும் உள்ளன. மொத்தமுள்ள 64 தொகுதிகளில்48 இடங்களில் இடது முன்னணி போட்டியிடுகிறது. 11 இடங்களில் ஐக்கிய முன்னணியின் காங்கிரசும், 5 இடங்களில் ஐஎஸ்எப்பும் போட்டியிடுகிறது. 2016ல் இரண்டு இடங்களிலும் சேர்த்து இடது முன்னணிக்கு ஏழு இடங்கள் கிடைத்தது. ஆனால் இந்த முறை இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இடது ஐக்கிய முன்னணியும், திரிணா முலும், பிஜேபியும் அனைத்து இடங்களிலும் வேட்பா ளர்களை நிறுத்தியுள்ளது. திரிணாமுலிலிருந்து காலை வாரி பிஜேபிக்கு வந்தவர்கள் தான் பெரும்பாலும் பிஜேபி வேட்பாளர்களாக நிற்கிறார்கள். பொதுவாக 24 பர்கானாக்களை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களே மாநிலத்தின் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கருதப்படுகிறது. விவசாயப் போராட்டங்களாலும், தொழில் வளர்ச்சிக்கான போராட்டங்களாலும், அறியப்பட்ட மேற்குவங்கத்தின் போராட்ட பாரம்பரியத்தை மேலும் உயர்த்திப் பிடிப்பதற்கே வடக்கு - தெற்கு 24 பர்கானாக்கள் தயாராகியுள்ளன. மாஃபியாக்களின் பிடியிலிருந்து விடுபடவும், அமைதியும், வளமும் நிறைந்த வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்பை இத்தேர்தல் மக்களுக்கு வழங்கியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து கோபி

தமிழில்: கே.சண்முகம்

நன்றி: தேசாபிமானி

;