election2021

img

இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்.... தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு சிஐடியு அறைகூவல்....

சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைஆதரிக்க வேண்டும் என்று சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிஐடியு மாநில நிர்வாகக் குழு கூட்டம் மார்ச்  9 அன்று சென்னையில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன், துணைத் தலைவர்கள் ஆர்.சிங்காரவேலு, எம்.சந்திரன் உட்பட மாநில நிர்வாகிகளும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்ற பொதுத்தேர்தலின் முடிவுகள் நமது மாநிலத்தில் மக்களின்  சமூக, பொருளாதாரம், வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்களை மதரீதியாக, சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் கட்சிகளை முறியடிக்கும் வகையிலும் அமைந்திட வேண்டும்.உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் பரவ தொடங்கிய போதும் மக்களை பற்றி கவலைப்படாத மோடி அரசு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை வரவேற்பதிலேயே முனைப்புக்காட்டியது. நோய் பரவலை தடுக்கும்வகையிலான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாமல் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தி தொழிலாளர் சட்டங்களையும், விவசாயச் சட்டங்களையும் அவசர கதியில் கொண்டு வந்தது.

மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் நாடு முழுவதும் திடீரென 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல்ஊரடங்கை அறிவித்தது.கொரோனா ஊரடங்கினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை  இழந்து நிர்க்கதியாய் நின்றனர். அப்போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி பாதுகாக்க முன்வரவில்லை. மாறாக முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை வாரி வாரி இறைத்தது.ஊரடங்கினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளானார்கள். எப்படியாவது சொந்த ஊர் சென்றிட வேண்டுமென்று ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றார்கள். அப்படிச் சென்றவர்களில் பல பேர் போகும் வழியிலேயே இறந்தனர்.கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் மாதம்ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், மாதம் ஒருவருக்கு10 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட  மத்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்தியும் கூட பிரதமர்மோடி எந்தவித நிவாரணத்தையும் வழங்க முன்வரவில்லை.நாடே ஊரடங்கில் உள்ள போது, சுரங்கம், ரயில்வே,மின்சாரம் வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம்  தனியாருக்கு தாரைவார்ப்பதிலும் முனைப்பு காட்டப்பட்டது.

மத்திய பாஜக ஆட்சியின் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி நடவடிக்கைகளால் குறு-சிறு-நடுத்தரதொழில்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இந்திய பொருளாதாரமே சரிவைநோக்கி சென்றது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் ஆலைமூடல்களும், வேலையிழப்புகளும், வேலையின்மையும், வருமானமின்மையும் அதிகரித்தது. பொதுமக்கள் சிறு-குறு-நடுத்தர உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டு விட்டது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாத நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் துவங்கி அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலைகளையும் திட்டமிட்டு உயர்த்தியதோடு, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளார்கள். இது கொரோனா வைரஸ் தாக்குதலைவிட கொடூரமானது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளையும் அவர்களுக்கு ஆதரவு தருவோரையும் தேச விரோதிகள் என்று பட்டம் சூட்டுகிறது மத்திய பாஜக அரசு.மத்திய அரசின் அலுவல் பணிகளில் இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்தி பேசாதமாநிலங்களில் திணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  தமிழகத்தில் புயல், மழை-வெள்ளம் போன்ற இயற்கைபேரிடர்களால் தொடர்ந்து மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகிய போதும் இவர்களுக்கு தேவையான  குறைந்தபட்ச உதவிகளை அளிப்பதற்கு கூட போதுமான நிதி ஒதுக்காத அரசாங்கமாக மத்திய மோடி அரசு இருந்தது.

கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் வேடிக்கை பார்த்த அரசாங்கமாக தான் மத்திய பாஜக அரசு இருந்தது.தமிழகத்தில்  முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மத்திய அரசின் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வையும், உதய் மின் திட்டத்தையும், உணவு பாதுகாப்பு சட்டத்தையும் எதிர்த்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு இவைகளையெல்லாம் ஏற்று அமல்படுத்தியது.
கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான நிதி இல்லாமல் திணறிய நிலையிலும் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை கேட்டு பெறுவதற்குக்கூட திராணியற்ற அரசாங்கமாக எடப்பாடி பழனிசாமி அரசு இருந்தது.தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஒன்றைக்கூட எதிர்க்க திராணியற்ற அரசாகவே அதிமுக அரசு இருந்தது.

மத்திய பாஜகவும் அவ்வப்போது தனது அமலாக்க பிரிவுகளை ஏவி பணியவும் வைத்தது. அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதான குட்கா ஊழல், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள், அரசுதுறைகளில் வேலை நியமனங்களில் முறைகேடு, ஊர்மாற்றம், பதவி உயர்வு போன்ற அரசு நிர்வாக நடவடிக்கைகளில் லஞ்சம், மணல் கொள்ளை, காண்ட்ராக்ட் கொள்ளை, டாஸ்மாக் பார் கொள்ளை என மக்களின் பணத்தை பங்கு போட்டுக் கொள்ளவே ஆட்சியை தக்கவைக்க பாஜகவோடு சேர்ந்து வருகிறது அதிமுக.கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அளித்தமருத்துவர், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமற்ற அரசு தான் அதிமுக அரசு. கொரோனா காலத்திலும் முன்கள பணியாளர்களை போன்று வீடுவீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை, கணக்கெடுப்புப் பணிகளை செய்த அங்கன்வாடி ஊழியர்கள், ஊரைசுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்படியான ஊதியத்தையும் தர மறுக்கிற அரசு தான் அதிமுக. அதுபோன்று அரசுப் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை,டாஸ்மாக், உள்ளாட்சி, கூட்டுறவு போன்ற மாநில பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளனர். அங்கன்வாடி,சத்துணவு ஆஷா போன்ற திட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மறுக்கப்படுகிறது. புதிய பென்சனை கைவிடமறுக்கிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் 8 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொண்ட அரசு, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன், பஞ்சப்படி 2 ஆயிரம் கோடியும், அரசு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேலும் பாக்கி வைத்துள்ளது.

அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் நிரந்தரப் பணிகள் அனைத்தும் ஒப்பந்த முறைக்கு தள்ளப்பட்டது.கட்டுமானம், ஆட்டோ, தையல், சுமைப்பணி மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், பணப்பயன் கேட்பு என அனைத்துக்கும் ஆன்லைன் மூலம் தான் என்று அறிவித்தது. படிப்பறிவற்ற, கிராமப்புற முறைசாராத் தொழிலாளர்களை அலைக்கழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது அதிமுக அரசு.அரசாங்கத்தின் முத்தரப்புக் குழுக்களில் முதலாளிகள், தொழிற்சங்கங்களுக்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு இடம் அளித்து சட்டத்தையே அவமதித்து வருகிறது அதிமுக அரசு.அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தியதன் மூலம் வேலைக்காக காத்திருந்த படித்தஇளைஞர்களின் கனவை தகர்த்தது அதிமுக அரசு. காவல்துறை பெண் அதிகாரி முதல் அனைத்து பெண்களும் பாதுகாப்பற்ற தமிழகமாக அதிமுக அரசு மாற்றியது. ரவுடிகளின் சாம்ராஜ்ஜியமாக மாற்றியது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டது. வெற்றி நடை போடும் தமிழகமே என்று மக்கள் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாய்களை கொட்டி விளம்பரம் செய்யும் அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன்சுமையை  ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக ஏற்றியதே சாதனையாகும். மாநிலத்தையே கடன்காரன் மாநிலமாக மாற்றியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். துணைக்கு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் நயவஞ்சக பாஜகவையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளனர்.இனியும் இவர்களை அனுமதித்தால் தமிழும் இருக்காது, தமிழ் மொழியும் இருக்காது; தமிழர்கள் என்ற அடையாளங்களே இல்லாமல் செய்துவிடுவார்கள்.

மத்திய பாஜக - மாநில அதிமுக அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடி வரும் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.கார்ப்பரேட்களுக்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் நாட்டை கூறுபோட்டு விற்க துணிந்துள்ள பாஜகவையும் அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள அதிமுக  கூட்டணிக் கட்சிகளையும் தமிழக உழைப்பாளி மக்களும், சிஐடியு உறுப்பினர்களும், வாக்காளர்களும் தோற்கடிக்க வேண்டுமென சிஐடியுதமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது.தமிழகத்தை போன்று புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை மூலம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டுமென புதுச்சேரி உழைப்பாளி மக்களுக்கு சிஐடியு தமிழ்நாடுமாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, மாநில சுயாட்சியை நிலைநாட்டும் அரசாங்கத்தை உருவாக்கிட ஏப்ரல் 6 ஆம் தேதிநடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில்  இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களை  சிஐடியு தமிழ்மாநிலக்குழு  அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;