election2021

img

50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை பாஜக அரசு ஒழித்துக் கட்ட நினைக்கிறது.... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கருத்து.....

கந்தர்வகோட்டை:
50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கமும், இடதுசாரிகளும் போராடிப் பெற்ற உரிமைகளை மோடிஅரசு ஒழித்துக்கட்டப் பார்க்கிறது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
கந்தர்வகோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து கறம்பக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:

ஜனநாயகத்தின் தொட்டிலாக, உலகின் சிறந்த ஜனநாயக நாடாக விளங்கி வந்த நமது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து இருக்கிறது.இந்திய ஜனநாயகத்தை முறியடித்து சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துகிற மத்திய அரசாங்கத்தையும் அதற்கு துணைபோகிற மாநில அரசையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு அரசாங்கங்களும் மக்கள் விரோத, சிறுபான்மையினர் விரோதப் போக்கை கொண்டிருக்கிறது.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யின்மையால் நாட்டில் வெறும் 30 சதவீதம் வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளனர். ஏறத்தாழ 75 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த அரசியல் சாசன மாண்பு களை காலில் போட்டு மிதித்து, மக்களாட்சியில் கடைப்பிடிக்க வேண்டிய எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை மதிக்காமல் அவமானப்படுத்தி வருகிறது.ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டமக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மையினருக்காக போராடிப் பெற்ற உரிமைகளை ஒழித்துக்காட்டும் நடவடிக்கைகளில் மத்தியஆட்சியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கிற வகையில் இந்த அணி திகழும்என்பதை இஸ்லாமிய பெருமக்களுக்கும், இஸ்லாமிய இளைஞர் களுக்கும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இஸ்லாமியர் களைப் பாதுகாக்கும் உறுதி திமுக வுக்கும் இடசாரிகளுக்கும் உண்டு. 

பல்வேறு மொழியை, கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டிருக்கிற நமது நாட்டின் மாண்புகளை சிதைக்கும் வகையில், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஒற்றைநாடு, ஒரே மொழி,ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில்தான் இதற்கான எதிர்ப்புக் குரல் வருகிறது. இந்த குதிரைக்கு கடிவாளம் போடாவிட்டால் அது தொடர்ந்து வெறியாட்டம் போடத்தான் செய்யும். கடிவாளம் போடும் நாளாக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கும் நாள் அமையும். அந்த நாளில் கந்தர்வகோட்டை தொகுதியின் பிரதிநிதியாக செல்லவேண்டிய நபர்தான் அருமைத்தம்பி சின்னத்துரை. 

சின்னத்துரையை இளமைக் காலத்திலிருந்து நான் அறிவேன். பல்லாண்டு காலமாக இவர் ஆற்றிவரும் அரசியல் பணிகளை நான் உற்றுக் கவனித்துவருகிறேன். சமய நல்லிணக்கத்திற்காக மட்டுமல்ல. சமுதாய நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர் சின்னத்துரை. நம்மைப் போன்ற வானம் பார்த்த பூமியில் உள்ள ஏழை, எளிய பாட்டாளி மக்களின், விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்ந்து தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது வேட்பு மனுவில் சொத்துப் பட்டியல் எதுவும் இல்லை. இவரை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் பதவி முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகும் இதே 10, 12 வேட்டி சட்டை மட்டும்தான் இவரின் சொத்தாக இருக்கும் என்பதற்கும், கமிசன் வாங்காத சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவார் என்பதற்கும் நான் உத்தரவாதம் தருகிறேன்.  இவ்வாறு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசினார்.வேட்பாளருடன் முன்னாள் எம்எல்ஏகவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர்.

;