புதுக்கோட்டை:
எந்தச் சூழலிலும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை நீங்கள் பார்க்க விரும்பினால் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்களியுங்கள் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.திமுக கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எம்.சின்னத்துரை வெள்ளிக்கிழமை குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம்செய்தார். கிள்ளனூரில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்து அவர் பேசிய தாவது:
கிராமப்புற மாணவர்கள் படித்துமுன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகசத்துணவுடன் முட்டை, இலவச பேருந்து பயண அட்டை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக இருந்தபோது நானும், ப.சிதம்பரமும் மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தோம். எடப்பாடி அரசு ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தை கொண்டு வருகிறது. அதாவது, நம்வீட்டுப் பிள்ளைகளை படிக்க விடாமல் விடுமுறை தினங்களில் ஆடுமேய்க்க அனுப்பும் சதி இதில் இருக்கிறது.இடதுசாரிகளின் ஆதரவோடு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் நூறுநாள் வேலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை மக்களும் அன்றாடம் நாட்டு நடப்புகள் தெரிய வேண்டுமென்பதற்காக கலைஞர் இலவச டிவிகொடுத்தார். இத்தனை வருடங்கள் கழித்தும் டிவி ஓடுகிறது. இவர்கள் கொடுத்த மிக்சி, மின்விசிறி எல்லாம்தினந்தோறும் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்கிறது. பெட்ரோல், டீசலைப் போட்டு மத்திய அரசு ஓடுகிறது. டாஸ்மாக் கடை மூலமாகமாநில அரசு ஓடுகிறது. இரண்டு அரசுகளுமே மக்களிடம் கொள்ளை யடித்துத்தான் நடக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரப்படும், சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி வழங்க உள்ளது. கடைசி நேரத்தில் இவர்கள் அறிவித்த கூட்டுறவுக் கடன்களைக்கூட மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் உண்மையாகவே தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கந்தர்வகோட்டை தொகுதியிலிருந்து அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் ஊருக்குள் இருந்த பேருந்துநிலையத்தை சம்பந்தமே இல்லாத சுடுகாட்டுக்கு மாற்றினார். மக்களின் எதிர்ப்பால் மீண்டும் பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் தொடர்கிறது. சுடுகாட்டில் கட்டிய கட்டிடத்தில் கருமாதிதான் நடக்கிறது. கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த ஆறுமுகம் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை.
திமுக கூட்டணியில் போட்டியிடும் எம்.சின்னத்துரை மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அகில இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்தான் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கட்டியிருக்கும் வேட்டி, சட்டையைத் தவிர வேறு சொத்துகள் எதுவும் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்மனைவி இன்னும் நூறுநாள் வேலைக்குச் சென்று கொண்டு இருக்கிறார். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தைத் தருகிறேன். சின்னத்துரை வெற்றி பெற்றால் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறாரோ 5 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலையில்தான் இருப்பார். மாற்றம் இருக்காது. எந்நேரமும் தொகுதி மக்களோடு இருந்து உழைப்பார். ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கமாட்டார். இந்தப் பகுதிக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதற்கு சின்னத்துரைக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். முன்னுதாரணமான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில்வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தனது பேச்சில் குறிப்பிட்டதோடு, கிள்ளனூரைத் தொடர்ந்து கோவில் வீரக்குடியிலும் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், முன்னாள் எம்எல்ஏகவிச்சுடர் கவிதைப்பித்தன், ஒன்றியக்குழுத் தலைவர் போஸ், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ரெங்கராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.