election2021

img

தெறிக்கவிடும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் அச்சம் அகலாத அதிமுகவின் தேர்தல் அறிக்கையும்.....

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் பொருளாதார நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி இருப்பதோடு, சமூக நீதி, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை போன்றவற்றை  உயர்த்திப்பிடிக்கிறது. மறுபுறத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை கடந்த பத்து ஆண்டு காலத்தில் தாங்கள் செய்து முடித்தது என்ன என்பதை கூறாமல், வானத்தை வில்லாக வளைக்கப்போவதாகவும், வானவில்லை பிழிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வர்ணம் அடிக்கப்போவதாகவும் அள்ளிவிடுகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்களை அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவே ஏற்காது. உதாரணமாக குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேறுவதற்கு அதிமுகவும், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவும் அளித்த வாக்குகள்தான் அடிப்படையாக உள்ளன. ஆனால் அந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என அதிமுகவின் தேர்தல் அறிக்கை கூறுவது அப்பட்டமான மோசடியாகும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை கூறியுள்ளபடி குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்றும் இந்த வாக்குறுதியை திரும்பப்பெறுமாறு அதிமுகவை கேட்டுக்கொள்வோம் என்றும் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.


அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1500 ரூபாய் உதவித்தொகை என்கிறது அதிமுக அறிக்கை. கொரோனா கொடுங்காலத்தில் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வக்கில்லாதவர்கள் மாதம் மாதம் வழங்கப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலையன்றி வேறென்ன?

                                          **************

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தரப்போகிறார்களாம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.125 வரை மத்திய பாஜக அரசினால் உயர்த்தப்பட்டது. அதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட அதிமுக கூறவில்லை. இப்போது 6 சிலிண்டர் இலவசம் என்கிறார்கள். சிலிண்டர் வாங்க முடியாத குடும்பப் பெண்களின் கோபநெருப்புக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

                                          **************

ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்கிறது அதிமுக. ஏன் இதுவரை அவர்கள்தானே ஆட்சியில் இருக்கிறார்கள்? ரேசன் பொருளை வீட்டுக்கு கொண்டுவந்து தரவிடாமல் தடுத்தது எது? கடைக்குச் சென்றாலே கிடைக்காத பொருள்கள் இனி வீட்டிற்கு எப்படி வரும்?

                                          **************

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிறது அதிமுக. ஏன் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. தடுத்தது எது? குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றும் அதிமுக கூறியுள்ளது. இவர்களது ஆட்சியில் அரசுப் பணி என்பதே முயற்கொம்பாகிவிட்டது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத நிலையை உருவாக்க அனைத்து மாநிலத்தவரும் மாநில அரசுப் பணித் தேர்வுகளில் பங்கேற்கலாம் என அரசாணை வெளியிட்டவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு எப்படி அரசு வேலை தருவார்கள்? அனைத்து அரசுப் பணிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்தப் பணிகளாக மாற்றும் நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது கடைசி நேரத்தில் செய்யப்படும் கண்கட்டு வித்தையன்றி வேறல்ல.

                                          **************

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வக்கில்லாதவர்கள் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என்கிறார்கள். இந்தியும், சமஸ்கிருதமும் வம்படியாக திணிக்கப்படும்போது வாய்மூடிக்கிடந்தவர்கள் தற்போது வாய்வீரம் காட்டுகிறார்கள்.மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பாடிய பல்லவியை வாய் வலிக்காமல் மீண்டும் பாடியுள்ளனர். ஒவ்வொரு படியாக மூடியிருந்தால் கூட இந்நேரம் மதுபானக்கடைகளை மூடியிருக்கலாம். கொரோனா காலத்தில் கூட உச்சநீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி உருண்டு புரண்டு மதுபானக்கடைகளை திறந்தவர்கள் எப்படி படிப்படியாக மூடுவார்கள்?

                                          **************

அனைத்து வீடுகளுக்கும் வாஷிங்மிசின் என்று அறிவித்துள்ளனர். சரி வீடு எங்கே என்று கேட்டுவிடுவார்கள் என பயந்து அனைவருக்கும் இலவச வீடு என்றும் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள். சூரிய சக்தி அடுப்பும் இலவசமாம். இதன் பொருள் இனி கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்பதுதான். அதற்குள் இவர்களது எஜமானரான மோடி சூரியனையும் அதானிக்கு விற்றுவிட்டதாக கூறாமல் இருந்தால் சரி. மறுபுறத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கை சமூகநீதி சாரம் கொண்டதாக அமைந்துள்ளது. முதல் வாக்குறுதியே மாநில சுயாட்சி குறித்ததாகும். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை மாநில சுயாட்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.

                                          **************

திமுக தேர்தல் அறிக்கையில், கல்வியை மாநில அரசுப் பட்டியலுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதும், புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும் மாநிலத்திற்கென தனியான மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்பதும் தமிழகம் எழுந்துநின்று கைதட்டி வரவேற்க வேண்டிய வாக்குறுதிகளாகும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளதோடு, மத்திய அரசு பணிகளுக்கும், மத்திய அரசு தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை பணிகளுக்கும் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில ஆட்சி மொழிகளில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடத்த வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது கடந்த கால அனுபவத்தால் இடுப்பொடிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களுக்கு இனிப்பூட்டும் செய்திகளாகும்.

                                          **************

மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக தமிழையும் சேர்க்க வலியுறுத்தப்படும் என்பதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழகத்தில் தமிழில் செயல்பட வலியுறுத்தப்படும் என்பதும் காலத்தின் குரலாகும்.உயர்நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்கும் என்பதும் இந்தி, சமஸ்கிருத திணிப்பு முற்றாக எதிர்க்கப்படும் என்பதும், திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும் என்பதும், உலகின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்பதும் தமிழில் எழுத்துவடிவம் சிதைந்திடா வகையில் தூய தமிழ் வரிவடிவத்தை அனைத்து இடங்களிலும் கட்டாயமாகப் பின்பற்ற உரிய சட்டம் என்பதும் செம்மொழி தமிழுக்கு மேலும் செம்மை சேர்க்கும் வாக்குறுதிகளாகும்.

                                          **************

சேது சமுத்திரத் திட்டம் என்று ஒன்று இருப்பதையே அதிமுகவினர் மறந்துவிட்டனர். அப்படி நினைத்தால் கூட பாஜகவினர் தலையில் குட்டுவார்கள். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது 10 ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட பிழையை திருத்தும் அறிவிப்பாகும்.அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நாப்கின் வழங்க தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஏற்கெனவே இந்தத் திட்டம் இடதுஜனநாயக முன்னணி அரசால் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

                                          **************

தமிழறிஞர்களுக்கு சிலை என்பதற்குப் பதிலாக அவர்களது பெயரால் அவர்களது ஊரில் நூலகம் அமைக்கப்படும் என்பது மிகச்சிறப்பு. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்காக தனித்தீர்மானம் முன்மொழிந்தார். எனினும் அது ஏற்கப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டிய கோரிக்கையாகும் இது. 

                                          **************

இடஒதுக்கீடு தொடர்ந்து இடர்பாட்டில் சிக்கும் நிலையில் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. சாதி, சமய, நல்லிணக்கத்தை பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க போதனைகளை போற்றும் வகையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது, கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிக்கொண்டேன் என்று வெந்துநொந்த வள்ளலாரின் தனித்த சிந்தனைகளை பரப்பிட வகை செய்யும் அற்புதமான அறிவிப்பாகும். அர்ச்சகப் பயிற்சி முடித்து காத்திருக்கும் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகப் பணி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்கும் அறிவிப்பாகும். இதிலும் கூட கேரள மாநிலம் முன்னோடியாக விளங்குகிறது. 

                                          **************

505 அம்சங்களுடன் வெளிவந்துள்ள திமுகவின் தேர்தல் அறிக்கை சமூகநீதி மற்றும் சமூக சீர்திருத்தத்துறையில் மிகவும் அடிக்கோடிட்டு கூறக்கூடிய திட்டங்களைக் கொண்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது, தமிழகத்தின் மதச்சார்பற்ற, சமூகநீதி, பகுத்தறிவு, பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்ற  நம்பிக்கையை இந்த அறிக்கை அளிக்கிறது.

தேர்தல் அறிக்கை காப்பி அடிக்கப்படுவதாக அதிமுக அவ்வப்போது அலறுகிறது. திமுகவின் அறிக்கையில் உள்ள சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை காப்பி அடித்து கூறக்கூட அதிமுகவுக்கு தைரியம் இருக்காது. அப்படியே தைரியம் வந்தாலும் அதன் எஜமானர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

விமர்சகர் :  மதுக்கூர் இராமலிங்கம்

;