election-2019

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோடு, ஏப்.2-

ஈரோட்டில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் வஉசி பூங்கா அருகில் செவ்வாயன்று காலை 10.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. விசாரணையில், ஈரோடு அசோகபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வசூலான பணம் என்பதும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.  


தக்காளி வியாபாரியிடம் ரூ.1.39 லட்சம் பறிமுதல்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். கோபி அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் திங்களன்று நள்ளிரவு 12 மணி அளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி உமாபதி தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் துரைசாமி, முருகசாமி அடங்கிய குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் இருந்த மாரிமுத்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தில் தக்காளி வாங்க செல்வதாக அவர் கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் வ.அசோகனிடம் ஒப்படைத்தனர்.


;