election-2019

img

தார்ச்சாலையில் தலைகீழாக புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது

கோயம்புத்தூர், ஏப்.4-


பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தின் தார்ச்சாலைகளில் தலைகீழாக புரண்டாலும் தாமரை மலரவே மலராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் புதனன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் இரா.அதியமான், திராவிடர் கழகத்தின் கலியன்பூங்குன்றன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-மோடியின் ஐந்தாண்டு கால மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்ட இந்திய மக்கள் தயாராகிவிட்டனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியைக் காணமுடிகிறது. அந்த எழுச்சி கோவையிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இங்கு நடப்பது பொதுக் கூட்டமா, மாநில மாநாடா அல்லது வெற்றி விழா கூட்டமா என அழைக்கப்படும் வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த கூட்டம் அமைந்துள்ளது. 17 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பாசிச மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். இங்கு பி.ஆர்.நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை, உங்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார். அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும். தலைவர் கலைஞர் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். தோல்வி என்பதை அறியாமல் வெற்றியை மட்டும் அடைந்தவர் கலைஞர். அவர் சார்பில் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். 


கொள்கைக் கூட்டணியும் கொள்ளைக் கூட்டணியும்


கூட்டணி அமைத்தோம். களத்தில் இறங்கிஇருக்கின்றோம். முறையாக கூட்டணி அமைத்துவேட்பாளர்களை அறிவித்து விட்டு கோவையில் கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்படுகின்ற முதல்கூட்டம் இந்த கூட்டம். தேர்தலுக்காக அமைந்தகூட்டணியல்ல இந்த கூட்டணி. கடந்த காலத்தில்மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பலபோராட்டங்களை இணைந்து நடத்தி இருக்கின்றோம். இது கொள்கைக்காக அமைந்த கூட்டணி. எதிர்த்தரப்பில் உள்ள கூட்டணி கொள்ளைக்கார கூட்டணி. நேற்று வரை ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள், இன்று ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். தேர்த லுக்கு முன்னால் சேர்ந்தவர்கள் தேர்தலுக்கு பின்னால் பிரிந்து போவார்கள். கொள்ளைக் கூட்டத்தில் அதுதான் நடக்கும். 


40க்கு 40 வெற்றி உறுதி


40க்கு 40 வெற்றியைப் பெற போகின்றோம். இடைதேர்தலிலும் 18 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 21 தொகுதிகளில் நடத்தப்பட வேண்டிய இடைத்தேர்தல் 3 தொகுதிகளில் நடத்தப்படவில்லை. அதற்கு பின்னால் சதி இருக்கின்றது. சூலூர் எம்.எல்.ஏ இறந்து போனதால் 22 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வேண்டும். திமுக வெற்றி பெற்று விட்டால் அதிமுக ஆட்சியில் இருந்து அகன்று விடும். உளவுத்துறை மோடிக்கும் எடப்பாடிக்கும் தகவல் அளித்துவிட்டது. அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கப் போகிறது என்று. ஆகவே தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இடைத்தேர்தல் நடத்தப்படா மல்இருக்கின்றது. துரைமுருகன் வீட்டில் வேண்டும் என்றே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகின்றது. எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது. யாருடைய வீட்டில் இருந்தோ எடுத்து விட்டு துரை முருகனுக்கு தொடர்பு இருக்கின்றது என்று சொல்லி தேர்தலை நிறுத்த திட்டமிடுகின்றனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளிலும் இடைதேர்தலை இதை காரணம் காட்டி நிறுத்த முயல்கின்றனர். இது தொடரும் என்றால் இங்குள்ள அனைத்து கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என எச்சரிக்க விரும்புகிறோம்.


மோடி, எடப்பாடி வீட்டில் சோதனை நடத்துவீர்களா?


தேர்தல் கமிஷன் சோதனை குறித்து முறையாக தாக்கீது அனுப்பினீர்களா? காவல் துறையில் இருந்து புகார் வந்தால் சோதனை என்கின்றனர். மோடியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது என நான்சொல்கின்றேன். வருமான வரித்துறை சோதனை நடத்துமா? எடப்பாடி பழனிசாமி வீட்டிலும்,ஓ.பன்னீர் செல்வம் வீட்டிலும் வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் சோதனை நடத்துமா? சபேசன் என்கிற ஒப்பந்ததாரர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பர். அவரது வீட்டில் இருந்து ரூ.15 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. வேலுமணி தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த பணம் என நான் சொல்கின்றேன். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா? தோல்வி பயத்தில் வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மோடியும், எடப்பாடியும் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. 


‘கோ பேக் மோடி’ - தமிழகத்தில் உருவான முழக்கம்


மக்களை திசை திருப்பி, கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகத்தின் தார்ச்சாலையில் தலை கீழாக புரண்டாலும் தாமரை மலரவே மலராது. ஏனென்றால் ‘கோ பேக்’ மோடி என்கிற முழக்கம் தமிழகத்தில்இருந்து உருவானது. இதனைத் தொடர்ந்து தான் மற்ற மாநிலங்களுக்கு பரவி நாடு முழுவதும் கோ பேக் மோடி என்கிற முழக்கம் எதிரொலித்து வருகிறது. சிவகங்கையில் அமித்ஷா, மேடையில் ஒட்டு யாருக்கு என கூட்டத்தை பார்த்து கேட்டதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர்கள் கூட்டிய 200 பேர்கள் கூட தாமரைக்கு என சொல்லவில்லை. அந்த மேடையில் இருப்பவர்களும் பதில் சொல்லவில்லை. 


நமக்கு நிரந்தர எதிரி பாஜக


பாஜக இப்போது வளர்ச்சியைப் பற்றி பேசுவதே இல்லை. அரசியலில் நிரந்தரஎதிரிகளும், நண்பர்களும் இல்லை என்பார்கள்.ஆனால் நமக்கு நிரந்தர எதிரி உண்டு. மோடியைநாம் எதிர்க்க காரணம் அவர் ஒரு சித்தாந்தத்தின்பிரதிநிதி. நாம் அதற்கு நேர் எதிர் தத்துவத்தின் பிரதிநிதிகள். ஆகையால் நமக்கு அரசியலில் நிரந்தரஎதிரி நரேந்திர மோடியும் அவரது சித்தாந்தமும்.கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு அரிய கண்டு பிடிப்பை கண்டுபிடித்து இருக்கின்றார். இந்தியாவில் மதக்கலவரம் நடக்கவே இல்லை என்கின்றார் அவர். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் மதக் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கை சி.பி.ராதாகிருஷ்ணனின் பங்கினை உணர்த்தும். (அந்த அறிக்கையினை பட்டியலிட்டு பேசினார் ஸ்டாலின்). இதில் அதிகமாக கலவரம் நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவை உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங் கள்தான். தமிழகத்தில் மட்டும் கலவரத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்து இருக்கின்றார். அதற்கு காரணம் இது பெரியார் மண். இங்கே இவர்களின் எந்த மதவெறி நடவடிக்கையும் எடுபடாது.பொள்ளாச்சி என்ற ஊரின் பெயரையே அதிமுகவினர் அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.


7 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணி யில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன்கள் இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காரில் கடத்திச் சென்றபோது காரில் இருந்து குதித்து ஒரு பெண் இறந்துள்ளார். காரில் இருந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் புகார் கொடுத்து இருக்கின்றார். ஆனால் அதனை சரியாக விசாரிக்கவில்லை. காவல் துறை அன்றே புகாரை சரியாக விசாரித்து இருந்தால் பல பெண்களை காப்பாற்றி இருக்க முடியும். இந்த விவகாரத்தை திசைதிருப்பத்தான் என் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் 2001ல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை கையில் எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார். இந்த கேள்விக்கு அன்றே சட்டமன்றத்தில் உங்கள் அம்மாவுக்கு பதிலை சொல்லிவிட்டேன்.


கடந்த 8 வருடமாக நீங்கள்தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இப்போது கூட வழக்கு போடுங்கள், நான் சந்திக்க தயார். இந்த சலசலப்பிற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.இந்த தேர்தலில் மக்கள் நல்ல முடிவைக் கொடுக்க காத்திருக்கின்றார்கள். கோவையில் பி.ஆர்.நடராஜன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதேநேரம், தி.மு.கழகத்தினர் எதிர் அணியில் உள்ள வேட்பாளர் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்கிற அறைகூவலை விடுக்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.முன்னதாக திமுக கோவை மாநகர் மாவட்ட பொருப்பாளரும் சிங்காநல்லூர் சட்டமன்றஉறுப்பினருமான நா.கார்த்திக் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர்ஜி.ராமகிருஷ்ணன்,திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், விசி இலக்கியன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி நன்றி கூறினார்.


;