election-2019

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் -- 84 லட்சம் இளைஞர்கள்

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கான பதிவினை செய்துவிட்டு 84 லட்சம் இளைஞர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவொரு புதிய திட்டமும் அரசிடம் இல்லை. கோயம்புத்தூர் பகுதியில் மட்டும் 10 பல்கலைக்கழகங்கள், 60 பொறியியல் கல்லூரிகள், 30 பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை, அறிவியல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒன்றரை லட்சம் பேரை வருடம்தோறும் உருவாக்குகிறது. அதேபோல தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1500 பொறியல் கல்லூரிகள், பாலிடெக்னி க்குகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை நிறைவு செய்து வேலைவாய்ப்பு சந்தையில் இணைகின்றனர். வேலைவாய்ப்பு தேடி சந்தையில் இணையக்கூடிய புதிய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிற அரசு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறது.


கல்லூரிகள், பள்ளிப்படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்கள் என ஆற்றல் மிக்க இளம் தலைமுறையினருக்கான வேலைகளை உருவாக்குவதற்கு உரிய முறையில் ஆய்வு, திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, வாய்ப்புகளை கண்டறிதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால் அரசு அதனை உணரவில்லை. சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற உலகமய சிந்தனையை பிரதிபலிப்பதாகவே அரசின் செயல்பாடு அமைகிறது. மக்கள் நலன் என்பதை சார்ந்த கொள்கைக்கு பெரும் அளவிலான அழுத்தம் இளம் தலைமுறையினரிடமிருந்து உருவாக வேண்டியுள்ளது. இந்தத் தேர்தலை இளம்தலைமுறையினர் தங்களின் வாழ்நிலை மலர நிச்சயம் பயன்படுத்துவார்கள்.


எஸ்.பாலா



;