மதுரை, ஏப்.2-
இந்தியாவை இருளில் மூழ்கடித் துள்ள மோடியை வீட்டுக்கு அனுப்ப மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி பெறச்செய்யுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.சு.வெங்கடேசனை ஆதரித்து ஜெய்ஹிந்த்புரத்தில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில் அவர் பேசியதாவது:-
மதுரைத் தொகுதிக்கென்றே தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுச் சென்று மதுரையை உலக பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக மாற்ற முயற்சி மேற்கொள்வார். பாஜக-அதிமுக-வைப் போல் ஓட்டுக்காக “வசனங்களை” உதிர்ப்பவர்கள் நாங்கள் அல்ல. மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள். கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மதுரை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும், மென்பொருள் நிறுவனங்களும் கொண்டு வரப்படும். சிறு-குறு தொழில்களுக்கு புது ரத்தம்பாய்ச்சப்படும். மதுரையின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப் படும். செல்லூர், மாடக்குளம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்படும். காணாமல் போன கிருதுமால் நதியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்துபாஜக செயலாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசன் அவதூறு பரப்புகிறார். அவதூறுகளைத் தடைக்கற்களாகப் பார்க்கவில்லை. வெற்றிக்கான ஏணிப் படிகளாக அவற்றைப் பார்க்கிறோம்வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம், விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலைஎன கடந்த தேர்தலில் மோடி வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதில் ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. இப்போது மீண்டும் எனக்கு வாக்களியுங்கள் புதிய இந்தியாவை உருவாக்குகிறேன் என்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா காணாமல் போகும். நல்லது நடந்தால் அதற்குக் காரணம் “நான்” என்றும் கெட்டது நடந்தால் “நான் அவனில்லை” என மோடி கூறிவருகிறார். நாடாளுமன்ற விவாதங்களுக்குப் பதிலளிக்காத மோடியால் எப்படி புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.வளர்ச்சி... வளர்ச்சி... என மோடி கூறுகிறார். கார்ப்பரேட்டுகள் தான் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். ஏழை-எளிய மக்கள் வளர்ச்சியடையவில்லை. விடுதலைப்போராட்டத்திற்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்தது பாஜக. ஆனால் அந்தக் கட்சி தேசபக்தி பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.திமுக தலைமையிலான மதச்சார் பற்ற கூட்டணி இயற்கையாக உருவானது. அதிகமான சீட்டுகளுக்காகவும் நோட்டுக்காகவும் பாஜக-வுடன் பாமக, தேமுதிக கூட்டுவைத்துள்ளது.இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு மோடி ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ரபேல்பேர ஊழலால் நாடே நாறிக்கிடக்கிறது. ஊழலில் ஊறித் திளைப்பவர்களால் ஊழலை ஒழிக்க முடியாது. அதிமுக-விற்கு மாற்று அமமுக அல்ல.இருளில் உள்ள இந்தியாவை மீட்க மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு உ.வாசுகி பேசினார்.இந்தக்கூட்டத்திற்கு திமுக பகுதிச் செயலாளர் ஏ.கே.முருகானந்தம் தலைமை வகித்தார். 89-ஆவது வட்டச்செயலாளர் சந்திரன், காவேரி சொக்கலிங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் முருகன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டதுணைச் செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார், என்.ராஜபாண்டி. குரோணி செந்தில், பி.செல்வம், கே.பி.சுப்பையா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிநிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.