election-2019

img

மதச்சார்பின்மைக்கு கேடு விளைவிப்போரை தூக்கி எறிய வேண்டும்

திருவாரூர், ஏப்.6-


வர்ணாசிரமத்தை தாங்கிப் பிடிக்கவே பாஜக இந்து மதத்தை முன்னிறுத்துகிறது. எனவே இந்துக்களின் சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்ள பாஜக-வை வீழ்த்த வேண்டுமென திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்தார்.திருவாரூர் கடைவீதி அருகில்சட்டப்பேரவை தொகுதி திமுகவேட்பாளர் பூண்டி கே.கலை வாணன், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து வெள்ளிக் கிழமை இரவு அவர் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் என்னநடந்தது என்பதை நினைவு கூர்ந்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தா லும் பல இனத்தவரும், மொழி பேசுவோரும் ஒன்றாக இணைந்து வாழ்கிறோம். அந்த ஒற்றுமைக்கு, மதச்சார்பின்மைக்கு கேடு விளையுமெனில் அவர்களை துரத்த வேண்டும். எல்லோரும் ஓரினம் என்று இந்து தேசமாக மாற்ற முயலும் மத்திய அரசை அகற்ற வேண்டும். மக்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டு மெனில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மதவேற்றுமையை தோற்றுவித்து ஆட்சிக்கு வர நினைக்கிறது பாஜக. பணமதிப்பிழப்பு மிகப்பெரியசாதனை என்று கூறி வாக்குகேட்க பாஜகவால் முடிய வில்லை. மக்களிடம் எடுத்துச் சொல்ல பாஜகவுக்கு எவ்வித சாதனைகளும் இல்லை. அதனால் மீண்டும் வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்கிறது. பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், உண்மையை கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்ணுக்கு கொடுமை நடந்தால், அதைக் கண்டு துடிக்காமல் ஆட்சியில் இருப்போர் உள்ளனர். எனவே முதுகெலும்பில்லாத அதிமுக அரசை அகற்றவும், மதவாதத்தை விதைத்து நாட்டை துண்டாட நினைக்கும் பாஜக அரசை அகற்றவும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.