கோவை, மார்ச். 31 -
தொழில்களை சீர்குலைத்து தொழிலாளிகளின் வேலையை பறித்து, அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தி இந்திய நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கியதே மோடியின் ஐந்தாண்டுகால சாதனை என பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கோவை நாடாளுமன்ற தொகுதியில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். ஞாயிறன்று சூலூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.
இந்த பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன், திமுகவின் மாவட்ட துணை செயலாளர் சி.என்.ராஜன், தளபதி முருகேசன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மௌனசாமி, பி.எஸ்.ராமசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பிரிமியர் செல்வம், பாலன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, ஆனந்தகுமார், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் டில்லிபாபு, ஆர்.வேலுசாமி, எம்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு மேடையில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து உழைப்பாளி மக்களின் உரிமைக்காக உழைப்போம் என்கிற உறுதியோடு பிரச்சாரத்ததை துவக்கினர்.
இப்பயணம், வெங்கட்டாபுரம், நீலம்பூர், அரசூர், முதலிபாளையம் குரும்பாளையம், தென்னம்பாளையம், மோப்பிரிபாளையம், வாகராம்பாளையம், செலம்பராயன்பாளையம், கணபதிபாளையம், எலச்சிபாளையம், வடுகபாளையம், செகுடந்தாளி, சோமனூர், கரும்பத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
முன்னதாக வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்பேசுகையில், சூலூர் பகுதியில் விவசாயமும், விசைத்தறியும் முக்கியமான தொழிலாக உள்ளது. ஏதோ பிழைப்பு நடத்துகிறோம் என்று இருந்த நிலையில் இருந்து மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் இந்த பொழப்பே வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவர்களின் ஆட்சியில் வேலை பறிப்பும், விவசாயம் அழிப்பும் நடைபெற்றுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சியில் 58 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 82 ரூபாய், கேபிள் கட்டணம் 100லிருந்து 500க்கு உயர்ந்துள்ளது. செல்போனுக்கு இன்கம்மிங் காலுக்குகூட காசை பறிக்கிற ஆட்சி மோடி ஆட்சி. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கான திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மாற்று புதிய அரசு மத்தியில் ஆட்சியமைக்கும் காலம் வரவுள்ளது. அப்போது நமது மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் நீராதாரத்தை காப்பற்ற ராஜவாய்க்கால்களை சீரமைப்போம், சூலூர் ராஜவாய்க்காலை தூர் வாரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யவும், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களுக்கு தேவையான நவீன உபகரணங்கள் ஆகியவைகள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி ஏழைஎளிய மக்கள் பயன்பெரும் வகையில் எனது செயல்பாடு இருக்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாடு வளம்பெற்றது என விழாக்கொண்டாடிக்கொண்டிக்கொண்டிருந்தார் எதிர் அணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன். ஜிஎஸ்டியால் தொழில்கள் கடுமையாக சீரழிந்து கிடக்கிறது ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டி கூடாது என்று வீதிதோறும் நாங்கள் பிரச்சாரம் செய்வதை கண்டு பயந்து போய் உள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன். இப்போது ஜிஎஸ்டியை குறைக்க மோடி அரசை வலியுறுத்துவேன் என்கிறார். இதுதான் எங்கள் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி. போலி வேடமிட்டு சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் முறியடிப்பார்கள். ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றம் நிகழும். தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாற்பது இடங்களையும் கைப்பற்றும் என்றார். முன்னதாக இந்த வாக்கு சேகரிப்பு பயணத்தில் கூட்டணி கட்சிகளை சார்ந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.