புதுதில்லி,
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி தற்போது மீண்டும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 4.71கோடி ரூபாய் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 1993ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்த பின் தில்லி பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி மூலமாக பி.காம் சேர்ந்தாகவும் ஆனால் இதுவரை முடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இராணி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 1994ம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஸ்மிருதி இராணி பொய் கூறுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது அவரே பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ஸ்மிருதி இராணி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். நாங்கள் அதுபற்றி கேள்வி எழுப்பவில்லை. அப்படியானால் இதுவரை அவர் ஏன் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார், தொடர்ச்சியான பொய் தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.