election-2019

img

‘அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது’

அரக்கோணம், ஏப். 1-அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அரக்கோணம் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து அரக்கோணத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் புகார் வந்தால் நடவடிக்கை என தேர்தல் ஆணையம் சொல்கிறது. நான் புகார் தருகிறேன் நடவடிக்கை எடுப்பீர்களா? எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக வருமான வரித்துறையைப் பயன்படுத்துகின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து எடுத்து இருக்கின்றார்கள். எடுத்ததற்குப் பிறகு அமைதியாகப் போய்விட்டார்கள்.இன்றைக்கு தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. எப்படி அதிமுகவைப் பயப்படுத்தி மிரட்டி அச்சுறுத்தி சிபிஐ ரெய்டு, புலனாய்வுத் துறை சோதனை மூலம் அடிபணிய வைத்தார்களோ, அதேபோல் நம்மையும் அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள். திமுக எதற்கும் மசியாது.நாங்கள் தடாவைப் பார்த்தவர்கள். மிசா, பொடாவைப் பார்த்தவர்கள். உங்களுடைய சட்டம் எங்களை என்ன செய்யப் போகின்றது? மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை. எனவே தான், இந்த அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது'.இவ்வாறு பேசினார்.


வேலூர் கூட்டு குடிநீர்த்திட்டம்


தனதுபேச்சின் இறுதியில அரக்கோணம் மக்களவைத்தொகுதி வாக்காளர்களுக்காக மு.க.ஸ்டாலின் சில வாக்குறுதிகளை அவர் அளித்தார். அவை வருமாறு: சோளிங்கர் சிறீ லக்ஷ்மி நரசிம்மர் மலை கோவிலுக்கு திமுக ஆட்சியில் 2006-11ல் ரோப்கார் அமைக்கக் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மீண்டும், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அது செயல்படுத்தப்படும். வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி வரை விரிவாக்கம் செய்யப்படும்.


27விழுக்காடு இடஒதுக்கீடு


அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில், அந்தத் தொகுதிக்கு என்னென்னப் பணிகளை ஆற்றப் போகின்றோம் என்பதையும் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றோம். மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நான்காவது ரயில்பாதைஅனைத்திந்திய அளவில் தமிழகத்தில் இருப்பது போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியரசு பணிகள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு தனி இடஒதுக்கீடு செய்யப்படும். சென்னை, காட்பாடி, சேலம், கோவை வழித்தடத்தில் மூன்றாவது, நான்காவது ரயில் பாதை அமைக்கப்படும். மத்திய மாநிலஅரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.



கேபிள் கட்டணம் குறைக்கப்படும்


ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிகளை பங்குச் சந்தையிலும், தனியார் நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படாது. மத்திய அரசு பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும்.ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயணச்சலுகை வழங்கப்படும். அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவிற்கு குறைக்கப்படும்.


திண்டிவனம்- நகரி ரயில் பாதை


நகரி, திண்டிவனம் ரயில்பாதை அமைக்கப்படும். காவேரிப்பாக்கம் ஏரி தூர்வாரப்படும். இப்படி பல திட்டங்களை நிறைவேற்றப் போகின்றோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றோம். அதனை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். வரும் 18ஆம் தேதி நடைபெறக் கூடிய தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியிலும் நமது வேட்பாளர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அனைவரும் அயராது உழைக்கவேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.