மோடி அரசு எரிவாயு மான்யத்தை எப்படி பூஜ்ஜயத்திற்கு கொண்டுவந்ததோ அதே வழியில் ரயில்வே சலுகைகளையும் வெட்டத் தொடங்கியுள்ளது. பயணச்சீட்டை ரத்து செய்தால் எப்படிபணம் பிடுங்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். முதியோர் கட்டண சலுகைகளையும் விட்டுக்கொடுக்கிறீர்களா? பயன்படுத்தப் போகிறீர்களா என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். கடைசியில் முதியோர் சலுகையையே வெட்டி விடுவதை நோக்கி ரயில்வே சென்று கொண்டி ருக்கிறது.புதிய ரயில் வண்டிகளே விடுவதில்லை என்று முடிவெடுத்து மோடி அரசு அமல்படுத்தி வருகிறது. புதிய வண்டி விட்டால் அது சுவிதா அல்லது சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் என்றுதான் விடப்படுகிறது. இவற்றில் ஒரே சீரான கட்டணம் கிடையாது. ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டும் 20 சதவீத கட்டணம் கூடும். அனைத்தும் தட்கல் கட்டணமும் பிரீமியம் கட்டணமுமாக இருக்கும்.இந்த வண்டிகளில் எந்த சலுகை கட்டணமும் கிடையாது. காசநோயாளி, புற்றுநோயாளி, விளையாட்டு வீரர், முதியோர், சிறுவர் என எவருக்கும் எந்த சலுகையும் வழங்கப்படாது. முழுக்கட்டணம் அதுவும் பிரீமியம் கட்டணம். சிறுவர்களுக்கு அரை டிக்கெட் கட்டணமும் படுக்கை வசதியும் இருந்தது. அந்த சலுகையையும் மோடி அரசு ரத்து செய்துவிட்டது. படுக்கை வசதி வேண்டுமென்றால் முழுக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று வகுத்து விட்டார்கள். மோடி ஆட்சியில் ரயில் கட்டண சலுகைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகிறது. நாளைக்கு தனியார்மயமாகும் போது அந்த சலுகை இல்லாது போனால் நீங்கள் எதிர்த்து பேச மாட்டீர்கள் அல்லவா? மக்கள் விரோத மோடி ஆட்சியையும் அவர்தம் கூட்டாளிகளையும் விரட்டி அடிக்க வேண்டிய நாள் வரும் 18 ஆம் தேதி என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக்கூடாது.
ஆர்.இளங்கோவன்