election-2019

img

தமிழக பண்பாட்டுக்கு எதிரானது அதிமுக அணி

சென்னை, ஏப். 6 -


பாஜக, அதிமுக, பாமக சந்தர்ப்பவாத அணி தமிழகப் பண்பாட்டிற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று இரவு (ஏப்.5) தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, திட்டக்குழு உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளும் மோடி ஆட்சியில் சீர்குலைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, அரைப் பாசிச ஆட்சி நடத்த முயற்சிக்கிறார். இத்தகைய பாஜகவுடன், அதிமுக, பாமக கூட்டணி அமைத்திருப்பது தமிழக பண்பாட்டுக்கே எதிரானது. மதவெறியும், சாதிவெறியும் ஒன்றாகக் கூடி நிற்கிறது. கலவரம் செய்வதைத் தவிர இவர்களுக்குள் வேறு எதிலும் ஒற்றுமை கிடையாது.மோடியின் நண்பருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக் கொன்றது. மோடியும், எடப்பாடி யும் தேசத் துரோகிகள் என்று கூறிய ராமதாஸ், இப்போது மோடிதான் சிறந்த பிரதமர், எடப்பாடியை விட சிறந்த முத லமைச்சர் இல்லை என்கிறார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் போன்றவர்களோடு எடப்பாடியை ஒப்பிடுவது நியாயமா? உங்களுக்கு நாக்கில் நரம்பே இல்லையா?தமிழக அமைச்சர்கள் பற்றி ஆளுநரிடம் ஆதரங்களோடு ஊழல் பட்டியலை கொடுத்ததோடு, ஊழல் நாயகர்களை விரட்டுகிற வரை ஓய மாட்டோம் என்று ‘அமுல்பேபி’ அன்பு மணி கூறினார். ஒன்றரை மாதத்தில் எடப்பாடி உலகமகா சிந்தனையாளர் என்கிறார்.

ஊழல் பணத்தில் உங்களை சரிக்கட்டிவிட்டாரா?நீட் தேர்வு மூலம் கடந்தாண்டு எம்பிபிஎஸ் சேர்ந்த 3700 பேரில் ஒருவர்தான் அரசுப் பள்ளி மாணவர். இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதாக அதிமுக, பாமக கூறுகின்றன. இதை பாஜக ஏற்காத நிலையில் நீட் தேர்வை எப்படி நீக்க முடியும்? மேகதாதுவில் அணை கட்டுவதை ரத்து செய்வோம் என்று எங்காவது பாஜக கூறியிருக் கிறதா? பாஜக, அதிமுக, பாமக தலை வர்கள் ஆளாளுக்கு எதைஎதையோ பேசுகிறார்கள். இந்த சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து ‘மெகா கூட்டணி’ என்கிறார்கள்.அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக இருந்தஆட்சியையும் பறிகொடுத்தது. பாஜகவுடன் புதிதாக எந்த ஒரு கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. ஏற்கெனவே இருந்த கட்சிகளும் வெளியேறிவிட்டன. இந்த நிலையில் பாஜக அணி எங்கே இருக்கிறது? எப்படி வெற்றி பெறும்?ஆதரவு அலை புயல் மாதிரி வீசுவ தாக கூறும் எடப்பாடி ஏன் உள்ளாட்சித் தேர்தலை 2 வருடமாக நடத்தவில்லை? 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த மறுப்பது ஏன்? ஆட்சி பறிபோய்விடும் என்பதால் நடத்த மறுக்கிறார்கள். எப்போது நடத்தினாலும் அதில் திமுக தலைமையிலான அணி வெல்லும். இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், மதச்சார்பின்மை பாதுகாக்க 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெல்லும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாம்பரம் தொகுதிச் செயலாளர் க.வெ. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டக்குழு உறுப்பினர் இ.பொன்முடி, திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, மதிமுகமாவட்டச் செயலாளர் மாவை. மகேந்திரன், விசிக மாவட்டச் செய லாளர் தேவஅருள்பிரகாசம் மற்றும் சலீம்கான் (மமக), விஜய் ஆனந்த் (காங்.) த. கிருஷ்ணா, கு.ராஜன்மணி, யு.அணில்குமார் (சிபிஎம்) உள்ளிட்டோர் பேசினர்.

;