election-2019

ஒரு குடம் பாலில் பல நச்சுத் துளிகள்!

தேர்தல் திருவிழா தமிழகத்தில் சிறப்பாக நடந்ததாக ஊடகங்களும் சில சமூக செயற்பாட்டாளர்களும் பெருமை கொள்கின்றனர். தள்ளாத வயதிலும் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பலர் வாக்களித்தனர். மூத்த தலைவர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு, சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஜனநாயக கடமை ஆற்றுவதில் இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்ந்தனர். சில இடங்களில் மணக்கோலத்தில் வந்து மணமக்கள் வாக்களித்தனர்.எனினும் தமிழகத்தில் தேர்தல்கள் பல முரண்பாடுகளுக்கிடையே நடந்து முடிந்துள்ளது என்று கூறுவது தவறாகாது. தேர்தல் ஆணையம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த விமர்சனங்கள் மிக நியாயமானவை என்பதை எந்த ஒரு நடுநிலையாளரும் மறுக்க மாட்டார்கள். இந்திய தேர்தல் வரலாற்றில் ஆணையம் இவ்வளவு பாரபட்சமாக நடந்து கொண்டது இதுவே முதல் முறை!தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் ஒரு புறமிருக்க சில இடங்களில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் அராஜகங்கள் குறிப்பாக பா.ம.க.வின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை.


எதிர்க்கட்சிகளை முடக்க சதி!


எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணியை முடக்க மோடி- எடப்பாடி கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்- வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் சிரம் மேற்கொண்டு செயல்பட்டன எனில் மிகை அல்ல. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் செய்தது போல வேறு சில தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க முயன்றனர். தூத்துகுடியில் திமுக தலைவர்கள் அனிதா இராதாகிருஷ்ணன் மற்றும் கனிமொழி வீடுகளில் சோதனை நடத்தினர். கரூர் தேர்தல் அதிகாரி பகிரங்கமாக தேர்தலை தள்ளி வைப்பேன் என மிரட்டினார். தகவல்கள் அடிப்படையில்தான் சோதனைகள் நடந்ததாக தேர்தல் ஆணையர் கூறுகிறார். ஆனால் அஇஅதிமுக கூட்டணிக்கு எதிராக தரப்பட்ட எந்த ஒரு புகாரின் மீதும் நடவடிக்கை இல்லை. தேனி உட்பட பல இடங்களில் பணம் வெள்ளமாக பாய்ந்தது. இதனை நிரூபிக்கும் வகையில் ஏராளமான காணொலிகள் வெளி வந்தன. தேர்தல் ஆணையம் கை கட்டி, வாய் பொத்தி மவுனம் காத்தது.ஆளும் கட்சியினர் ஆம்னி பேருந்துகளில் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் துணையுடன் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தொகுதிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர் என பல இதழ்கள் பகிரங்கமாக செய்திகளை வெளியிட்டன. இதுவும் கூட தேர்தல் ஆணையத்தை அசைக்கவில்லை. தூங்குபவனை எழுப்பலாம்! தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா?


விடுபட்ட வாக்குகள்- தற்செயலானதா?


தேர்தல் நாளன்று பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகின. சில இடங்களில் மதியம் வரை கூட இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. தேர்தல் ஆணையமே 300க்கும் அதிகமான இயந்திரங்கள் பழுதாகின என கூற வேண்டியதாயிற்று. சில இயந்திரங்களில் எதிர்க்கட்சிகளின் பொத்தான்கள் மட்டும் சரியாக செயல்படவில்லை. திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் ஒரு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் வாக்கு இரட்டை இலைக்கு பதிவானதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இராமநாதபுரம் தொகுதியில் ஒரு இயந்திரத்தில் போடப்பட்ட வாக்குகளைவிட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. பல தேர்தல்களாக வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை தொடர்கிறது. எனினும் குறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. திரை உலக பிரபலங்கள் மட்டுமல்ல; நீதிபதியின் பெயர் கூட விடுபட்டுள்ளது. குறிப்பாக குமரி தொகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக விடுபட்டுள்ளன. இவர்கள் எல்லாம் பா.ஜ.க.வின் பொன். ராதாகிருஷ்ணன் கொண்டு வர எத்தனித்த திட்டங்களை எதிர்த்தவர்கள்! எனவே இவர்களின் பெயர் விடுபட்டது என்பது தற்செயலானதா எனும் கேள்வி எழுகிறது. பெயர் விடுபட்ட சில திரைபிரபலங்களை வாக்களிக்க வழிவகை செய்த தேர்தல் முறை, சாமானியர்களுக்கு ஏன் உதவிடவில்லை எனும் கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். இந்த கேள்வியை தேர்தல் ஆணையம் எப்படி புறந்தள்ள முடியும்?100ரூ வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல விளம்பரங்களை செய்தது. எனினும் ஆரம்ப கட்ட விவரங்கள் 2014ம் ஆண்டு தேர்தலைவிட குறைவாகவே வாக்கு பதிவு நடந்துள்ளது என்பதை பறைசாற்றுகின்றன. வாக்களிக்க சென்னையிலிருந்து தம் சொந்த ஊர்களுக்கு பயணிக்க முயன்றவர்கள் பேருந்துகள் இல்லாமல் அவதியுற்றனர். பேருந்துகள் வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவர்களை எடப்பாடி அரசாங்கத்தின் காவல்துறை இரக்கமில்லாமல் தடியடி நடத்தியது. இதைவிட கொடூரம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?


பா.ம.க.வின் அராஜகம்!


இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த நிகழ்வுகளும் நத்தமேடு கிராமத்தில் நடந்த தேர்தல் முறைகேடும் முதலாளித்துவ தேர்தல் முறையை கேலிக் கூத்தாக்குகின்றன. பொன்பரப்பியில் திருமாவளவன் சின்னமான பானைக்கு வாக்களித்த தலித மக்களின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வாக்களித்தவர்களின் சாதி அடையாளத்தை நிந்தித்தபடி வீடுகளும் இரு சக்கர வாகனங்களும் எரிக்கப்பட்டன.தர்மபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி முழுவதும் பா.ம.க.வினர் கைப்பற்றி கொண்டனர் என 19.04.2019 தேதியிட்ட இந்து பத்திரிகை எழுதுகிறது. பா.ம.க.வினர் போட்டி போட்டு கொண்டு ஒவ்வொருவரும் 4 முதல் 6 வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இரண்டு பெண்கள் பூத் சிலிப்புகளுடன், ஆனால் அடையாள அட்டை எதுவுமின்றி வாக்களிக்க வந்தனர். எனினும் அவர்கள் பா.ம.க. ஆதரவாளர்கள் என்பதால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் இந்த வாக்குச் சாவடிக்கு பலமுறை வந்து சென்ற பிறகும் இந்த அராஜகம் தொடர்ந்தது. கண்காணிப்புக்கு பொருத்தப்பட்ட புகைப்பட கருவிகள் செயல் இழந்தன அல்லது திசை மாறி திருப்பி வைக்கப்பட்டன. 100ரூ வாக்குப்பதிவு நடந்தால் ஐயம் எழும் என்பதால் 90ரூ மட்டும் வாக்குகளை பதிவு செய்யுமாறு பா.ம.க.வினர் பகிரங்கமாக கூறியதாக இந்து பத்திரிகை நிருபர் எழுதுகிறார்.


மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தவிர மற்ற எந்த சமூகமும் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது தலித் மக்கள் எவராயினும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை! மாறாக அவர்களின் வாக்குகளை பா.ம.க.வினரே பதிவு செய்தனர் என இந்து பத்திரிகை கூறுகிறது! தேர்தலுக்கு முன்பே, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுமாறு கூறியதாக பா.ம.க. தலைவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனை நத்தமேடு கிராமத்தில் தெளிவாக அரங்கேற்றியுள்ளனர்!இத்தகைய செயல்கள் முதலாளித்துவ தேர்தல் முறையை கேலிக் கூத்தாக்குகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு சேர்ந்தாலே முழு பாலும் நச்சாக மாறிவிடும்! ஆனால் இங்கு ஒரு குடம் பாலில் பல துளிகள் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிகளின் அரசு இயந்திரங்களும் பணமும் சாதிய வன்மமும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சத்துடன் கை கோர்த்துள்ள வேதனையான தேர்தலாக இது அமைந்துள்ளது. இந்த அராஜகங்களை மீறி தமிழக மக்கள் மோடி-எடப்பாடி கூட்டணிக்கு மிகச்சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.


அ.அன்வர் உசேன்
;