சென்னை:
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடல்தகுதித் தேர்வு புதனன்று (நவ.6) தொடங்கியது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர்பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடல்தகுதித் தேர்வு நவ.6 அன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.இதில் உயரம், மார்பளவு, உடல் எடை உள்ளிட்ட சோதனைக்குப்பின், குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் ஓட்டம், குறுகிய ஓட்டம், கயிறு ஏறுதல்,நீளம் தாண்டுதல் என மதிப்பெண்களை உள்ளடக்கிய உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் அடுத்த கட்ட தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரின் தேர்வு அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. 5 நாட்களில் மொத்தம் 3 ஆயிரத்து 742 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களில் ஆயிரத்து 212 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.கோவை நேரு விளையாட்டு அரங்கில் காலை 6 மணிக்கு தொடங்கிய காவலர் உடற்தகுதித் தேர்வில் கோவை, திருப்பூர், ஈரோடு,நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 800 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு உயரம், எடை சரிபார்த்தல், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 113 பேர் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.