education

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஒழுகு’ -அண்டனூர் சுரா

ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளம் முகமது யாசின், அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறவன். கடந்த ஆண்டு சாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டுபோய் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணத்தை ஒப்படைத்திருக்கிறார். இச்செய்தி ஊடகங்களில் வெளிவர, நடிகர் ரஜினிகாந்த் முகமது யாசினை  தனது வீட்டிற்கு வரவைத்து பாராட்டியதுடன் அவனது கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டார்.  இச்சம்பவம் இரண்டாம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடத்தில் ‘நேர்பட ஒழுகு’ கார்ட்டூன் விளக்கப் பாடமாக இடம் பெற்றுள்ளது. 

ஒழுகு என்பது என்ன?
“வண்ணந்   தானே நாலைந்தென்ப ..” என்கிறது தொல்காப்பியம். வண்ணம் என்பது பா( பாடல்) வின் நடையழகு. 4×5 =20  இருபது வண்ணங்களில் ஒரு வகை ஒழுகு வண்ணம். 
ஆற்றுநீர் பொருள்கோள் பாடல்கள் , நீரோடைப் போல பேசுதல் யாவும் ஒழுகு வகையைச் சேர்ந்தவை. 
வாய்க்கொழுப்பு சீலையில் ஒழுகுதாம் - கிராம சொலவடை . 
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தனும் (ஒன்பது துளைகளுள்ள ஒழுகு உடம்பு)   என்கிறது திவ்வியப் பிரபந்தம்.
ஒழுகு என்பது  வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தலைக் குறிக்கும். ஒழுகு - chronicle. Deacon என்பதற்கு தூதுவர் (messenger), தேவாலய மணியக்காரர் (servant), செய்தித் தொடர்பாளர் (runner)எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். இதன்படி Deacon Chronicle என்கிற பிரபல ஆங்கில பத்திரிகை ‘தூதொழுகு’.
600 ஏக்கர் பரப்பளவு தீவில் எழுப்பப்பட்ட திருவரங்கம் கோயிலின் வரலாற்றைக் கூறும் நூல் - ‘கோயிலொழுகு’. இதன்படி, தர்மவர்ம சோழனால் கட்டப்பட்ட திருவரங்கம் காவிரிப் பெருக்கால் அழிந்துவிட, கிளிச்சோழனால் திருத்திக் கட்டப்பட்டது. 
ஒழுகு என்பதற்கு கூறுதல் என்று பொருள். 
ஒப்புரவு ஒழுகு. இங்கு ஒழுகு என்பதற்கு அதன்படி நடத்தல் .
கற்றதொழுகு. கற்றவற்றைப் பின்பற்று (பாரதியார் ஆத்திசூடி).
ஒழுகு, ஒழுகை -  வண்டியைக் குறிக்கும் ஒரு சொல் (யாழ்ப்பாணம் அகராதி)
இயல் இரட்டித்தல் புணர்ச்சி விதியின் படி, வினைகள் அதிலுள்ள மெய் எழுத்துகள் இரட்டித்து பெயராக்கம் பெறும். அதாவது, ஒழுக்க் +அம் - ஒழுக்கம். அம் - பின்னொட்டு.
ஒழுகு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டு உருவாகும் பிற சொற்களாவன: ஒழுகல், ஒழுகலாறு, ஒழுகிசை, ஒழுகிசைச்செப்பல், ஒழுகிசையகவல், ஒழுகிப்போதல், ஒழுகுகொண்டை, ஒழுகுநீட்சி, ஒழுகுமாடம், ஒழுகலான், ஒழுகப்படும், ஒழுகாய், ஒழுகுமதி, ஒழுகுவான்,... 
ஒழுகு - உயர்ச்சி, உயரம், ஒழுக்கம், நடை (செம்மொழி அகராதி).
‘தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்’ என்கிறது திருக்குறள். இங்கு ஒழுகுதல் என்பது மதித்து நடத்தல்.
‘வையங்காவலர் வழிமொழிந் தொழுக’ -புறநானூறு. இங்கு, முறைப்படி நடத்தல்.
‘கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம் ‘ - பழமொழி நானூறு. இங்கு, கடைபிடித்தல்.
‘ஒழுகுகொடிமருங்குல்’ - தொல்காப்பியம்.  நேர்மைப்படுதல்.
‘மின் ஒழுகு சாயன் மிகு பூட் பதுமை கேள்வன்’ - சீவகசிந்தாமணி. பரவுதல்.
ஒழுக்கெறும்பு - ஒரு பெரிய கறுப்பெறும்பு பிற எறும்புகளை வரிசையில் நடத்திச் செல்லல். இவ்வாறாக, ஒழுகு என்பதற்கு வரலாறு கூறுதல்,  பாய்தல், சொட்டுதல், முறையாக நடத்தல், வரிசையாக அடைந்திருத்தல், பரந்திருத்தல், வளர்தல், அதிகரித்தல், அமிழ்தல், இளகுதல்,  ஒழுகுதல் எனப் பலப் பொருள் இருந்தாலும் நேர்பட ஒழுகு என்பதில் ஒழுகு என்பதற்குப் ‘பின்பற்றி நடத்தல்’ எனப் பொருள் கொள்ளலாம்.