மக்களவை முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய போர் விமானி அபிநந்தனைப் பெருமைப்படுத்த வேண்டும். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்.
மீசை - எம்மொழிச் சொல்?
குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து மலையாள எழுத்தாளர் ஹரீஷ் ‘மாத்ருபூமி’ வார இதழில் ‘ மீசை’ என்றொரு தொடர் எழுதினார். இத்தொடர் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க தொடர் நிறுத்தப்பட்டது. மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யாவின் நாவல். மயிர் - வசைச் சொல் (லியோ தமிழ் அகராதி) ; மயிராண்டி - வசைச் சொல் ( கி.ரா வட்டார வழக்குச் சொல் அகராதி) . மயிருடன் நீதிமன்றத்தை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா’ என்கிறது திருக்குறள். பருவ ஆடவருக்கு உதட்டின் மேல் மயிர் முளைக்காமலிருப்பதும், மகளிருக்கு மயிர் முளைப்பதும் ஒருவகை நோயியம் என்கிறது மருத்துவவியல். பெண்களுக்கு உதட்டிலும், கன்னத்திலும் மயிர் முளைப்பதற்கு ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ என்று பெயர். இந்நோயியத்தால் பாதிக்கப்பட்டு அதை வரமாக எடுத்துக்கொண்ட பெண் ‘ஹர்னாம் கௌர்’. இவர் மீசை தாடியுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் . மீசை, தாடி முளைத்த பெண்கள் shemale, sheman என்றும் மீசை, தாடி முளைக்காத ஆண்கள் hefemale, hewoman எனவும்; மேலும் woerdo, beardo என்கிற சொற்களால் கேலிக்கு உள்ளாகிறார்கள்.
விளம்பரம் வழியே ஆணாதிக்க மனோபாவத்தைத் தோலுரித்துக் காட்டிய விளம்பரம்; மீசையை வேரோடு மழிக்கும் ‘ஜில்லட்(gillette)’. ஜில்லட் என்பதற்கு king camp என்று பொருள். அதாவது சிங்கத்தின் கூடாரம். சிங்கத்திற்கு கேசரி என்றொரு பெயருண்டு. கேசம் என்றால் மயிர். உலகில் மீசை என்பது whisters, hair, feeler, bristle, barbule, barb, moustache, cockroach என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மீசையை பிரிட்டிஷார் moustache என அழைத்தார்கள். இச்சொல் mostaccio என்கிற இலத்தீன் சொல்லிலிருந்து திரிந்தது. இதையே பூனை, புலி போன்ற பக்கவாட்டிலிருக்கும் நீண்ட முடிக்கு whiskers என்று பெயர். கரப்பான்பூச்சியின் தலையின் இருபுறமும் உள்ள விரைப்பான நீண்ட முடி - antenna. சல்வடார் டாலி என்கிற ஓவியர் தன் மீசையை antenna என அழைத்துக்கொண்டார். எனக்கான கற்பனை சக்தியை வானத்திலிருந்து எனக்குள் கொண்டு வந்து சேர்ப்பது மீசை என்பதாக அவர் நம்பினார். இது ஸ்பெயினின் பயன்பாட்டுச் சொல். இறால் மீனை தமிழக மீனவர்கள் மீசைக்காரன் என்பர். மீசையை முறுக்குதல் - சண்டைக்கு நிற்றல்.
மீசை (missa) என்கிற சொல் போர்த்துகீசிய மொழியில் உண்டு. இச்சொல்லே தெலுங்கில் மீசமு; கன்னடம் - மீசெ; மலையாளம் - மீசா என்பதாக உள்ளது. தமிழ் இலக்கியம் தாடியை ‘அணர்’ என்கிறது. ஆனால் மீசை என்கிற சொல் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. பின்னர் மிசை என்கிற சொல்லிலிருந்து மீசை உண்டானது. (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி). ‘துடித்த தொடர்மீசைகள் சுறுக்கொள ‘ (மாரீசன் படலம் - கம்பராமாயணம்). ‘மீசைநீள் விசும்பில்’( சீவகசிந்தாமணி). சிந்து நதியின் மிசை நிலவினிலே - பாரதியார். இங்கு மிசை என்பதற்கு மேலே (upon, over) என்று பொருள். மிசை - உயர்ச்சி eminence, elevation - (சூடாமணி); மிசை - மேலிடம், elevated place (பிங்கல நிகண்டு). ‘அவலா கொன்றே மிசையா கொன்றோ’ என்கிறது புறநானூறு. இங்கு மிசை என்பது மேடு. ‘மிசைபாடும் புள்ளின்’ - கலித்தொகை. இங்கு, மிசை - வானம் (sky). ஈற்றுமிசை யகர நீடலு முரித்தே (தொல்காப்பியம். எழுத்ததிகாரம்). மிசை - முன்னிடம் (front). மீ என்பதற்கு மேலிடம் , உயரம், வானம் என பலப் பொருளுண்டு. மிசை × மிஞ்சிகம். மிசை - ஆணின் மேலுதட்டு மயிர்முடி. மிஞ்சிகம் - பெண்களின் மயிர்முடி ; lock of women’s hair (பேரகரமுதலி) மீசை - மயிரு, முடி, ரோமம், உரோமம், உதட்டிழை, கொசை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் மீசை என்பதற்கான பொருத்தமான பதம் ‘மிசை மயிர்’.