புதுதில்லி:
அந்தந்த பள்ளிகளிலேயே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதற்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் கிருமிநாசினி திரவத்தை வெளிப்படையான பாட்டிலில் கொண்டு வரலாம். முக கவசம்அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளை தவறாமல் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.