சென்னை:
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வேதியியல் பாடத்தை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி மே 26 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல் லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.மாணவர்கள் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் வழங்கப் படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.