சென்னை,ஜூலை 31- தமிழகத்தில் பொறியியல் படிப்புக ளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 52 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 3ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 78 ஆயிரத்து 848 இடங்கள் நிரம்பின. இதை அடுத்து கடந்த 29ஆம் தேதி அன்று துணைக் கலந்தாய்வு தொடங்கியது. 12 ஆம் வகுப்பு சிறப்புத் தேர்வு எழுதியவர்கள், முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள் ஆகியோர் துணை கலந்தாய்வில் கலந்து கொண்டனர். ஜூலை 31 அன்று அதிகாலை 3 மணி வரை நீடித்த கலந்தாய்வில், 4 ஆயிரத்து 548 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மொத்தமாக 83 ஆயிரத்து 396 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 83 ஆயிரத்து 705 இடங்கள் காலியாக உள்ளன. இது மொத்த இடங்களுடன் ஒப்பிடுகையில் 52 விழுக்காடு ஆகும். இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 ஆயிரம் இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.