economics

img

அந்நியச் செலாவணி கையிருப்பு 52,452 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்.21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,452 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலவாணி கையிருப்பு கடந்த அக்.21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 384.7 கோடி டாலர் சரிந்து 52,452 கோடி டாலராக இருந்தது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 43,16,154 கோடியாகும்.

இதற்கு முன்னர், கடந்த அக்.14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 450 கோடி டாலர் சரிந்து 52,837 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும், தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, இதற்கு முந்தைய வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

அக்.21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃசிஏ 359.3 கோடி டாலர் சரிந்து 46,507.5 கோடி டாலராக இருந்தது. அதேபோல், முந்தைய வாரத்தில் 150.2 கோடி டாலர் சரிந்து 3,745.3 கோடி டாலராகக் காணப்பட்ட தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 24.7 கோடி டாலர் சரிந்து 3,720.6 கோடி டாலராகக் காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆர் 70 லட்சம் டாலர் அதிகரித்து 1,744 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 1.4 கோடி டாலர் சரிந்து 479.9 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

;