economics

img

உலக நெருக்கடியிலும் அசத்தும் மதுரோ அரசு: அதிரடியாக மீண்டது வெனிசுலா

காரகஸ், செப்.2- 2022 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 விழுக்காடாக இருக்கும் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பொருளாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் பொருளாதார நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக உற்று நோக்கி வந்தவர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. ஆகஸ்டு 23 ஆம் தேதியன்று ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை மேலும் பல ஆச்சரியமான தகவல்களைத் தருகிறது. 2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவில் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடாக வெனிசுலா இருக்கப் போகிறது.  2014 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையில் சரிவையே சந்தித்து வந்த வெனிசுலாவின் பொருளாதாரம், நடப்பாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த ஆண்டுகளில் வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 123 விழுக்காடு அளவுக்கு சரிந்து விழுந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் 30 விழுக்காடு சரிவை கண்டது. வெனிசுலாவின் பொருளாதாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என்றெல்லாம் மேற்கத்தியப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பு பொய்யாகும் வகையில் வெனிசுலாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இதில் மற்றொரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால்,  வெனிசுலாவின் பணவீக்கம் 157 விழுக்காடாகக் குறையவிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்நாட்டின் பணவீக்கம் நான்கு அல்லது ஐந்து இலக்கங்களில்தான் இருந்து வந்தது. 2018 ஆம் ஆண்டில் 1,30,060 விழுக்காடாக பணவீக்கம் இருந்தது.  அமெரிக்கா போட்ட தடைகளால் தள்ளாடிய வெனிசுலா, உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள சிறப்பு ராணுவ நடவடிக்கையால் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட அதிகமான அளவில் எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்காவும் சில தடைகளை அகற்றியுள்ளது.

அமெரிக்காவின் தோல்வி

வெனிசுலாவின் ஜனாதிபதிப் பொறுப்பில் இருந்து நிகோலஸ் மதுரோவை அகற்ற அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இடைக்கால ஜனாதிபதியாக முன்னிறுத்தப்பட்ட ஜூவான் குவாய்டோவை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் சத்தமில்லாமல் கைவிட்டுவிட்டார்கள். கொலம்பியாவைத் தளமாகக் கொண்டுதான் வெனிசுலாவை நிர்மூலமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வந்தன. தற்போது அங்கு இடதுசாரி ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அத்தகைய நடவடிக்கைகள் நின்று போயுள்ளன. மேலும் பல நாடுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஜனாதிபதிகள் நிகோலஸ் மதுரோவை வெனிசுலாவின் ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளனர்.

மூன்றாவது ஆச்சரியம்

லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய பொருளாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பிராந்தியத்தில் நான்காவது பெரிய பொருளாதாரமாக சிலி உருவெடுத்துள்ளது. ஏற்கனவே நான்காவது இடத்தில் கொலம்பியா இருந்தது. முதல் மூன்று இடங்களில் பிரேசில், மெக்சிகோ மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் சிலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 317 பில்லியன் அமெரிக்க டாலராகவும், கொலம்பியாவின் உற்பத்தி 314 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தது. கொலம்பியாவில் 5 கோடியே 10 லட்சம் மக்களும், சிலியில் 1 கோடியே 90 லட்சம் மக்களும் வசிக்கிறார்கள்.  தனது பொருளாதார மேம்பாட்டுக்கான வழியை வெனிசுலா கண்டுபிடித்து விட்டது என்றும், வெற்றிகரமான வருங்காலத்தை எப்படிக் கட்டுவது என்பதும் தெரியும் என்றும் வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தை ஆமோதித்துள்ள வெனிசுலாவின் மத்திய வங்கித் தலைவர் காலிக்ஸ்டோ ஓர்டேகா, “நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 17 விழுக்காடு வளர்ந்துள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

;